கச்சா எண்ணெய்க்கு மத்திய கிழக்கை நாடும் இந்தியா

2 mins read
933a62e0-814e-47a7-90dd-6038d49f764b
ரஷ்ய எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்தாலும் கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டுவரை செய்யப்பட்ட உச்ச அளவை அது எட்டாது. - படம்: தினமணி

இந்தியா: கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து அதிகம் இறக்குமதி செய்துவரும் இந்தியா, தற்போது அதன் கவனத்தை மீண்டும் மத்தியக் கிழக்கின் மீது செலுத்துகிறது என்று திங்கட்கிழமை (ஜனவரி 26) தினமணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சா எண்ணைய்யில் இருந்துதான் பெட்ரோல், டீசல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் 40 விழுக்காடு ரஷ்யாவில் இருந்து பெறப்படுகிறது.

உக்ரேன் போரின் காரணமாக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காடு வரை கூடுதல் வரிகளையும் தீர்வைகளையும் சுமத்திவருகிறது.

இந்நிலையில் இந்திய நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

எனவே, இந்தியாவுக்கு வழக்கமாக எண்ணெய் விநியோகம் செய்யும் மத்தியக் கிழக்கு நாடுகளை இந்தியா மீண்டும் நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஈராக்கிடமிருந்து அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து பெல்ஜியத்தில் இயங்கும் கெப்லர் பகுப்பாய்வு நிறுவனம் தரவுகள் வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

சவூதி அரேபியாவிலிருந்தும் கச்சா எண்ணெய்யை வழக்கத்தைவிட அதிகமாக இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இருப்பினும் ரஷ்யா வழங்கும் கட்டுப்படியான விலையில் மத்தியக் கிழக்கில் இருந்து கிடைக்கும் எண்ணெய் அமையவில்லை. ரஷ்ய எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்தாலும் அதன் அளவு, கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டுவரை செய்யப்பட்ட உச்ச அளவை எட்டாது என்று ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்