இந்திய, ஆசியான் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு உயர்வு

இந்திய, ஆசியான் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு உயர்வு

படம்: ராய்ட்டர்ஸ்

13 Oct 2026 - 4:21 pm

2 mins read

பேங்காக்: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், உலகளாவிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் ஆகியவை காரணமாக, 2026ஆம் ஆண்டில் இந்தியா, ஆசியான் ஆகியவற்றின் பொருளியல் வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைவிட விரைவாக இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியம் தனது ஆக அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற தனது வருடாந்தரக் கூட்டத்தின்போது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) வெளியிட்ட ‘உலகப் பொருளியல் நோக்கு’ அறிக்கையில், உலகப் பொருளியல் நடப்பாண்டில் 3.1 விழுக்காடாகவும் 2027ஆம் ஆண்டில் 3.4 விழுக்காடாகவும் வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் வெளியிடப்பட்ட முன்னுரைப்பில் 3 விழுக்காடாக இருந்த உலகப் பொருளியல் வளர்ச்சி, தற்போது 3.1 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் 2027ஆம் ஆண்டிற்கான முன்னுரைப்பில் மாற்றமேதும் செய்யப்படவில்லை. 2025ஆம் ஆண்டில் உலகப் பொருளியல் 3.5 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் வர்த்தகப் பதற்றங்கள் இருந்தபோதிலும், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொருளியல் நடவடிக்கைகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்தன,” என்று தனது வளர்ச்சி மதிப்பீட்டு உயர்வுக்கு அனைத்துலக நாணய நிதியம் விளக்கம் அளித்துள்ளது.

உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளியல் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. வலுவான உள்நாட்டுத் தேவை மற்றும் சேவைத் துறையின் சிறப்பான செயல்பாடு காரணமாக, 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது அனைத்துலக நாணய நிதியம் கடந்த ஜூலையில் முன்னுரைத்ததைவிட 0.6 விழுக்காடு அதிகமாகும்.

இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய ‘ஆசியான்-5’ பொருளியல்களின் கூட்டு வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் 4.4 விழுக்காடாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. முந்தைய முன்னுரைப்பு 4.1 விழுக்காடாக இருந்தது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான தரவு மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் முதலீடுகள் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

அதேவேளையில், ஆசியாவின் மிகப் பெரிய பொருளியலான சீனாவின் வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாகப் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது 0.1 விழுக்காடு குறைக்கப்பட்ட மதிப்பீடாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தொடரும் நிச்சயமற்ற சூழல் காரணமாக 2025ஆம் ஆண்டின் விழுக்காடு வளர்ச்சியிலிருந்து சீனா சரிவைக் கண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஆசியான்பொருளியல்முன்னுரைப்பு