சோமாலியாவின் 44 கடற்கொள்ளையர்க்கு ஆயுள் தண்டனை விதித்தது இந்திய நீதிமன்றம்

சோமாலியாவின் 44 கடற்கொள்ளையர்க்கு ஆயுள் தண்டனை விதித்தது இந்திய நீதிமன்றம்

1 mins read
910cd61f-3db4-43b4-b165-2f2a4cc65665
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் அனைவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதாகத் திங்கட்கிழமை (ஜூலை 20) கூறப்பட்டது. - படம்: ஏபி

மும்பை: கப்பல் கடத்தல் சம்பவங்களின் தொடர்பில் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் 44 பேருக்கு மும்பையின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.

அந்தச் சம்பவங்கள் கிழக்காசிய நாடான சோமாலியாவின் கடற்பகுதிக்கு அப்பால் நடந்தன.

இரண்டு சம்பவங்களில், பெரிய கப்பலொன்றையும் மீன்பிடிக் கப்பலொன்றையும் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அதிலிருந்து கப்பல் ஊழியர்களையும் அவர்கள் பிணை பிடித்தனர். பின்னர் இந்தியக் கடற்படையினர் ஊழியர்களை மீட்டு, கொள்ளையர்களைக் கைதுசெய்தனர்.

சோமாலியக் கடற்கொள்ளையர்கள் அனைவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 20) கூறப்பட்டது.

“கடலில் கப்பலைக் கடத்தி, கடலோடிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்து, மாலுமிகள், ஊழியர்களைப் பிணையாகப் பிடித்துவைத்து, அவர்களைக் கொல்ல முயன்றதோடு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதன் மூலம் நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்கொள்ளைச் செயல் மிகவும் கடுமையான ஒன்றாகும். இவற்றைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது,” என்றார் நீதிபதி எஸ்பி டிகே.

2023ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த முதல் கடத்தல் சம்பவத்தில் 35 சோமாலியர்கள் மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற ‘எம்.வி. ரூயன்’ என்ற சரக்குக் கப்பலைத் தாக்கினர். 2024ஆம் ஆண்டு மார்ச்சில், மேலும் ஒன்பது பேர் ஈரானியக் கொடியுடன் சென்ற ‘அல் கம்பார்’ என்ற மீன்பிடிப் படகைக் கடத்தினர்.

2024லிருந்து அவர்கள் நவி மும்பையின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்