தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எஃப்பிஐ தலைவராக தேர்வு; பாலிவுட் பாடலுடன் வரவேற்பு

2 mins read
e4c1e327-deb4-4d98-bc0f-ca2020ca3add
எஃப்பிஐ தலைவராக தேர்வு பெற்ற கேஷ் பட்டேல், பிரபல பாலிவுட் பாடலில் ரன்வீர் சிங்கைப் போல ஆட்டம் போடுவதை காணொளி காட்டியது. - படம்: இண்டியா டுடே

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் நம்பிக்கைக்கு பெயர்போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷ் பட்டேல், செனட் சபையில் 51-49 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநராக (எஃப்பிஐ) உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து திரு டிரம்ப்பின் உதவியாளரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான டேன் ஸ்கேவினோ, கேஷ் பட்டேலுக்கு உயர் பதவி கிடைத்ததை பிரபல பாலிவுட் பாடலை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இடம்பெறும் பாஜிராவ் மஸ்தானியில் வரும் பிரபல பாடலான ‘மல்ஹாரி’யின் ஒரு பகுதியை எக்ஸ் தளத்தில் அவர் பதிவிவிட்டுள்ளார்.

ரன்வீர் சிங்கின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அந்தப் பாடலில் அவரது முகத்துக்குப் பதிலாக கேஷ் பட்டேலின் முகம் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த 47 வினாடி காணொளி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.

வாக்களிப்பின்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபையில் அக்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து கேஷ் பட்டேலுக்கு எதிராக வாக்களித்தனர்.

திரு டிரம்புடன் பட்டேலுக்கு இருந்த அரசியல் ஈடுபாடு, எஃப்பிஐயின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

இருப்பினும், அமெரிக்காவின் முக்கிய சட்ட அமலாக்க அமைப்பின் இயக்குநராக முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்பதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

செனட் சபை உறுதிப்படுத்திய பிறகு பேசிய பட்டேல், “அரசியல் கலப்பு இல்லாமல் அமலாக்க நடவடிக்கைகள் இருக்கும் என்றும் எந்தவிதப் பழிவாங்கலும் இருக்காது,” என்றார்.

மேலும் தனது நீண்ட நன்றி தெரிவிக்கும் எக்ஸ் பதிவில் ஒன்பதாவது எஃப்பிஐ தலைவராக தான் உறுதி செய்யப்பட்டது ‘கௌரவம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவுக்காக அதிபர் டிரம்ப், தலைமைச் சட்ட அதிகாரி போண்டிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமெரிக்க மக்கள் வெளிப்படையான, நீதிக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் எஃப்பிஐக்குத் தகுதியானவர்கள்,” திரு கேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்