மலேசிய அரசாங்கப் பணியில் இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், 2027 முதல் 2029 வரை மூன்றாண்டுச் சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்திற்கு இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 132,713 அரசுப் பணியாளர்களில் இந்தியர்கள் 3.63 விழுக்காடு அதாவது 47,349 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த 2021 முதல் 2025 வரை இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட 194,807 அரசுப் பணி விண்ணப்பங்களில், 15,875 பேர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டு 5,289 பேர் பணி நியமனம் பெற்றனர். இது மொத்த விண்ணப்பங்களில் 2.71 விழுக்காடு.
கூட்டரசுப் பணியிலுள்ள 38,413 இந்தியர்களில் பெரும்பான்மையினர் கல்வி (21,773), சுகாதாரம் (14,758), உயர்கல்வி (1,882) ஆகிய மூன்று அமைச்சுகளிலேயே உள்ளனர் என்று அமைப்பின் தலைவர் திரு பசுபதி சிதம்பரம் சுட்டினார்.
ஏனைய கூட்டரசு அமைச்சுகள், அரசுத் துறைகள் அனைத்திலும் சேர்த்து 3,478 இந்தியர்களே பணியாற்றுகின்றனர். இது பிரதிநிதித்துவத்தின் தீவிரச் சீரற்ற தன்மையைக் காட்டுகிறது.
தலைமுறைகளாகப் பின்தங்கியுள்ள பி40 பிரிவு குடும்பங்களுக்கு அரசுப் பணி என்பது வாழ்வாதாரப் பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்தும் கருவி.
உயர்கல்விச் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை நெகிழ்வுத்தன்மையைப் போல, தரநிலைகளில் சமரசம் செய்யாமல், இந்தியர்களுக்கான ஆட்சேர்ப்பிலும் தகுந்த ஆயத்தப் பயிற்சிகளுடன் கூடிய கூடுதல் வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.
குறிப்பாக, நலிவடைந்த பி40 பிரிவைச் சேர்ந்த தகுதியான இந்திய இளைஞர்களுக்கு உரிய வழிகாட்டுதல், சிறப்புப் பயிற்சிகள், நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று ‘மாற்றத்தை முன்னெடுத்து, சமூகத்திற்கு அதிகாரம் அளித்தல்’ என்ற அந்தக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசுப் பணியில் சமத்துவமான வாய்ப்புகளை உறுதிசெய்வது, இந்திய சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும் என்று திரு பசுபதி வலியுறுத்தினார்.
