அரியவகை குரங்குகளைக் கடத்த முயன்ற இந்தியர் தாய்லாந்தில் கைது

அரியவகை குரங்குகளைக் கடத்த முயன்ற இந்தியர் தாய்லாந்தில் கைது

1 of 2
படம்: தி நேஷன்
படம்: தி நேஷன்

06 Feb 2026 - 7:32 pm

1 mins read

பேங்காக்: இந்தோ-சீன வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அரியவகை குரங்குகளைத் தாய்லாந்திலிருந்து வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற இந்திய நாட்டவர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிருடன் இருந்த லூட்டொங் இனத்தைச் சேர்ந்த இரண்டு குரங்குகள் ஏறத்தாழ $4,000 (தாய்லாந்து 100,000 பாட்) மதிப்புள்ளவை.
உயிருடன் இருந்த லூட்டொங் இனத்தைச் சேர்ந்த இரண்டு குரங்குகள் ஏறத்தாழ $4,000 (தாய்லாந்து 100,000 பாட்) மதிப்புள்ளவை. - படம்: தி நேஷன்

தலைநகர் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) சுங்கத்துறை அதிகாரிகள் விலங்குநல அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகள் மேற்கொண்டனர்.

அவர்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சந்தேகப்படும்படி நடந்துகொள்வோரை கடுமையாகச் சோதித்தனர். அச்சமயம் உயிருடன் இருந்த லூட்டொங் இனத்தைச் சேர்ந்த இரண்டு குரங்குகளை ஓர் இந்தியர் அவரது தனிப்பட்ட பொருள்கள் வைக்கும் பயணப் பையில் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தனித்துவமான வெள்ளி உரோமங்களைக் கொண்ட அந்த குரங்குகள் ஏறத்தாழ $4,000 (தாய்லாந்து 100,000 பாட்) மதிப்புள்ளவை ஆகும். இந்தியாவுக்கு விமானத்தில் செல்லத் தயாராக இருந்த அந்த ஆடவரைத் தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்தனர். அந்த இரு குரங்குகளும் விலங்குநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன் விவரங்களை சுவர்ணபூமி விமான நிலைய சுங்கத் துறையின் பயணிகள் கண்காணிப்பு அலுவலக இயக்குநர் சந்தனி பைராட்டனகொர்ன் தெரிவித்தார்.

சந்தேக நபர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விலங்கின பாதுகாப்புச் சட்டம் (2019) அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட விலங்குகளை ஏற்றுமதி செய்வதை தடுக்கிறது. சுங்கத்துறைச் சட்டம் (2017) அதிகாரப்பூர்வமற்ற வகையில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு எதிரானது.

தாய்லாந்தில் லூட்டொங் இனக் குரங்குகள் பாதுகாக்கப்படுபவை. அவற்றின் வர்த்தகம் அனைத்துலக பாதுகாப்பு ஒப்பந்தங்களின்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்விலங்குஇந்தியர்விமான நிலையம்