இந்திய சமூகத்தின் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவதன் அவசியம்

இந்திய சமூகத்தின் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவதன் அவசியம்

2 mins read
6903c26d-0d4d-4eb5-a96e-904fad59c6bc
மலேசிய இந்திய காங்கிரசின் தேசிய துணைத் தலைவர் எம். சரவணன் (மாலையுடன்). - படம்: மலேசியாகினி

ஈப்போ: முறையான பதிவுகள் இல்லாமல் மலேசிய இந்திய சமூகத்தின் வளமான கலாசார பாரம்பரியம் மங்கிவிடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், அதன் வரலாற்றை ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை ஆவணப்படுத்துவது கடந்த காலத்தைப் பிரதிபலிப்பதற்கு மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அவசியம் என்று மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) தேசிய துணைத் தலைவருமான அவர் விளக்கினார்.

நவீன மலேசியாவின் பிறப்பு மற்றும் வளர்ச்சியில் இந்திய சமூகம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“நமது முன்னோர்கள் அடர்ந்த காடுகளை அழித்து, பொருளியலை உந்தித்தள்ளிய ரப்பர் தோட்டங்களை நிறுவி, நமது ரயில்வே, சாலைகள், பாலங்களுக்கு அடித்தளமிட்டனர்,” என்று அவர், ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 26) ஈப்போவில் உள்ள கிந்தா இந்திய சங்க அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

தேசத்தைக் கட்டமைப்பதில் இந்திய சமூகத்தின் பங்களிப்புகளைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துகள் அதிகரித்து வருவது குறித்தும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சரவணன் கவலை தெரிவித்தார்.

இத்தகைய கூற்றுகளை முறியடிக்க, முறையான ஆவணப்படுத்தலே மிகவும் பயனுள்ள வழி என்று அவர் வலியுறுத்தினார்.

“பதிவுகள் இல்லாமல், இந்தியர்கள் தாங்கள் ஒரு காலத்தில் இல்லமாகக் கருதிய தோட்டங்களில் உண்மையிலேயே வாழ்ந்து, அவற்றை மாற்றியமைத்தார்களா என்று எதிர்காலச் சந்ததியினர் கேள்வி எழுப்பக்கூடும்.

“எனவே, நமது இருப்பை ஆவணப்படுத்துவது முற்றிலும் அவசியமாகும்,” என்று அவர் கூறினார்.

சரவணன், கிந்தா இந்திய சங்கத்தைச் சமூகத்தின் ஒரு தூண் என்று வர்ணித்ததோடு, அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க அரங்கத்தை நிறுவியதில் மஇகாவின் வரலாற்றுப் பங்கையும் பாராட்டினார்.

பல பத்தாண்டுகளாக உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, விளையாட்டுத் துறையில் சங்கத்தின் சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.

“இந்தச் சாதனைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, மூத்த காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் எம். கரத்துவின் பதிவேடுகள் மூலம் சங்கத்தின் விளையாட்டு மைல்கற்களை ஆவணப்படுத்துவதற்கு எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்