தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கக் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் இந்திய மாணவர்கள்

2 mins read
1e2d2ac3-5564-4278-84ea-ce297fed3539
ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடு கூடி, 1.1 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கக் கல்லூரிகளில் கடந்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரித்து, 2009க்குப் பிறகு முதல்முறையாக அனைத்துலக மாணவர்களை அனுப்புவதில் சீனாவை முந்தி மாணவர் சேர்க்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியது.

‘இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எடுகேஷன்’ எனும் அமைப்பின் தரவுகளின்படி, 2023-2024 கல்வியாண்டில் 331,602 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடு கூடி, 1.1 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது கொவிட்-19 தொற்றுநோய்க்கு சற்று முந்திய காலகட்டத்தில் இருந்த ஆக அதிகமான எண்ணிக்கையைவிட அதிகம்.

சீனாவிலிருந்து 4 விழுக்காடு குறைவாக 277,398 மாணவர்கள் சென்றுள்ளனர். எனினும், அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.

பட்டதாரி, இளநிலை பட்டக்கல்வி நிலையில் அமெரிக்காவிலுள்ள அனைத்து அனைத்துலக மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்திய, சீன மாணவர்கள்.

அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களால் சீன மாணவர்களின் எண்ணிக்கை சரிந்தாலும், இளநிலை மாணவர்களை அதிக அளவில் அனுப்பும் நாடாக அது உள்ளது.

கொவிட்-19 வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவில் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்ட் டிரம்ப் இன்னும் உறுதியான குடியேற்றக் கொள்கைகளை வெளியிடவில்லை என்றாலும், அனைத்துலக மாணவர்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கக் கல்லூரியில் பட்டம் பெறும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் நிரந்தரக் குடியுரிமை அட்டைகளைப் பெற வேண்டும் என்று ஜூன் மாதம் டிரம்ப் கூறினார். ஆனால், அது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றுவிட்டார்.

“அனைத்துலக மாணவர்கள் அமெரிக்க வளாகங்களை வளப்படுத்துகிறார்கள், கலாசாரப் பரிமாற்றத்தை வளர்க்கிறார்கள். நாட்டின் பொருளியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்,” என்று ஜஜஇ-இன் (IIE) தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆலன் குட்மேன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் பெரும்பாலான அனைத்துலக மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத் துறைகளில் படிக்கின்றனர்.

25 விழுக்காட்டினர் கணிதம், கணினி அறிவியல் படித்துள்ளனர். அதே நேரத்தில் ஐந்தில் ஒருவர் பொறியியலைத் தேர்ந்தெடுத்தனர்.

பொதுவாக அமெரிக்க கல்லூரிகளில் சேர்வதற்கு முழுக் கட்டணத்தையும் செலுத்தும் அனைத்துலக மாணவர்கள், மொத்த அமெரிக்க உயர்கல்வி மக்கள்தொகையில் 6 விழுக்காட்டினர். 2023ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளியலுக்கு US$50 பில்லியனுக்கும் ($67.15 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அதிகமாக அவர்கள் பங்களித்துள்ளனர் என்று அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்