அமெரிக்க அரசியலில் வலுக்கும் இந்தியர் குரல்

அமெரிக்க அரசியலில் வலுக்கும் இந்தியர் குரல்

படங்கள்: திஃபெடரல், தி கார்டியன், மெட்பேஜ் டுடே

05 Nov 2026 - 9:54 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பலர் பெரும் வெற்றி பெற்று அந்நாட்டு அரசியலில் தங்களின் பலத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.

பிரதிநிதிகள் அவைக்கு அமி பேரா 8வது முறையாகவும், ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாஷிங்டன் தொகுதியில் 87 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைக் குவித்து பிரமிளா ஜெயபால் பெரும் வெற்றி பெற்றார்.

வர்ஜீனியாவில் முன்னாள் ஒபாமா நிர்வாக ஆலோசகர் சுஹாஸ் சுப்ரமணியம் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிலிக்கான் வேலி பகுதியை உள்ளடக்கிய கலிபோர்னியாவின் 17வது தொகுதியில் ரோ கன்னா மீண்டும் வென்றார்.

இவர்களுடன் புதிய முகங்களாக இருவர் இணைந்துள்ளனர்.

டோனல்ட் டிரம்ப்பின் பண்ணை அமைந்துள்ள புளோரிடாவின் 22வது தொகுதியில் பியா தண்டியா வென்று, அம்மாநிலத்திலிருந்து தேர்வான முதல் இந்திய வம்சாவளிப் பெண் ஆனார். அரிசோனாவின் முதல் தொகுதியில் மருத்துவர் அமிஷ் ஷா வென்று, அம்மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி எம்பியானார். இதனால் பிரதிநிதிகள் அவையில் இந்தியர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

குடும்பத்துடன் நித்யா ராமன், லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர சபை உறுப்​பின​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட முதல் தெற்​காசி​யப் பெண் என்ற  பெருமைக்குரியவர்.
குடும்பத்துடன் நித்யா ராமன், லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர சபை உறுப்​பின​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட முதல் தெற்​காசி​யப் பெண் என்ற  பெருமைக்குரியவர். - படம்: நித்யா ராமன் இஸ்டாகிராம்

அமெரிக்காவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான 25 வயது நித்யா ராமன் அந்நகரின் முதல் தெற்காசிய மேயராகிறார்.

ஹார்வர்ட், எம்ஐடியில் பயின்ற இவர், சென்னையிலும் லாஸ் ஏஞ்சல்சிலும் சமூக அமைப்புகளைத் தொடங்கி வீடற்றோர் நலம், துப்புரவு, பெண்களுக்காகப் பணியாற்றுபவர்.

மாநில அளவிலான தேர்தல்களில், மேரிலாந்து துணை ஆளுநராக ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 62 விழுக்காட்டு வாக்குகளுடன் மீண்டும் தேர்வானார். இல்லினாய்ஸ் மாநில செனட் தொகுதியில் 27 வயதான நபீலா சையத் வெற்றி பெற்றார். டெக்சாஸ் சட்டப்பேரவைக்கு பூஜா சேத்தி தேர்வானார்.

மாநில சட்​டமன்றத் தேர்​தல்​களி​லும் இந்​திய வம்​சாவளி​யினர் கணிச​மான அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேவேளையில், ஓஹியோ ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப்பின் ஆதரவு பெற்ற தொழிலதிபர் விவேக் ராமசாமி உட்பட, குடியரசுக் கட்சியில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் எவரும் வெற்றி பெறவில்லை.

காங்கிரசின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், ஹெச்-1பி விசா, கிரீன் கார்டு தேக்கத்தால் இந்தியச் சமூகம் தவிக்கும் சூழலில், புதிய பிரதிநிதித்துவம் அதிகார மையங்களில் ஆக்கபூர்வமான செல்வாக்கைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்