வார்சா: போலந்திற்கு சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு போலந்து பிரதமர் டோனல்ட் டஸ்க் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) அதிகாரபூர்வ வரவேற்பளித்தார்.
உயர்மட்டக் கூட்டங்களுக்காக கியவ் செல்வதற்கு முன்னதாக திரு மோடி, டஸ்க்குடன் சந்திப்பு நடத்தினார்.
பாதுகாப்பு, இந்தியாவின் உத்திபூர்வ பங்காளித்துவ நாடான ரஷ்யாவின் உக்ரேன் போர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து மோடியும் டஸ்க்கும் பேச்சு நடத்தினர். பின்னர் மோடி போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவை சந்தித்தார்.
மத்திய ஐரோப்பாவில் இந்தியாவின் முக்கியப் பொருளியல் பங்காளியாகப் போலந்து திகழ்வதாகத் தமது பயணத்திற்கு முன்னர் மோடி கூறினார்.
இரு தலைவர்களும் இணையப் பாதுகாப்பு, பாதுகாப்புத் துறையை உள்ளடக்கிய இருதரப்பு உத்திபூர்வ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் அமர்ந்திருக்கும் போலந்து, அதன் கிழக்கு எல்லையில் ஈராண்டுகளாக நடந்து வரும் போர் குறித்து கவலை கொண்டுள்ளது. அது உக்ரேனுக்கு அரசியல், மனிதாபிமான, பாதுகாப்பு ஆதரவை வழங்குகிறது.
கடந்த மாதம் மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்ட மோடியை கியவ் கண்டித்தது. அப்போது அவர் அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார். உக்ரேனில் நடக்கும் போருக்கு அமைதியான தீர்வை வலியுறுத்திய மோடி, ரஷ்யாவைக் கண்டிப்பதைத் தவிர்த்தார்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி அந்தச் சந்திப்பை ‘பெரிய ஏமாற்றம், அமைதி முயற்சிகளுக்கு பேரழிவு தரும் அடி’ என்று விவரித்தார். சந்திப்பின்போது புட்டினைக் கட்டிப்பிடித்ததற்காக மோடியை அவர் திட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
மோடியின் போலந்துப் பயணம் புதுடெல்லிக்கும் வார்சாவுக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்பு உறவுகளின் 70ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்தியத் தூதரகம் மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களின்படி, இருதரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 2013 முதல் 2023 வரையிலான காலத்தில் யுஎஸ் 1.95 பில்லியன் டாலரிலிருந்து 5.72 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதிகள் பெரும்பான்மையாக உள்ளன.
முன்னைய இந்திய அதிபர் பிரதீபா பாட்டீல் 2009இல் போலந்துக்குப் பயணம் மேற்கொண்டார். டஸ்க் 2010இல் இந்தியாவிற்கு வருகையளித்தார்.
வெள்ளிக்கிழமை ஸெலன்ஸ்கியை சந்திக்க மோடி கியவ் செல்கிறார்.