கடத்தலின் உச்சத்தை உணர்த்தும் இந்தியாவின் ஓராங் உத்தான் குரங்குகள்

கடத்தலின் உச்சத்தை உணர்த்தும் இந்தியாவின் ஓராங் உத்தான் குரங்குகள்

படம்: ஜப்பான் டைம்ஸ்

20 Sep 2026 - 5:01 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியக் காடுகளில் கைவிடப்பட்டு அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்ட ஐந்து ஓராங் உத்தான் குரங்குக்குட்டிகள் அந்நாட்டில் உயர்ந்துவரும் விலங்கினக் கடத்தலை வெளிக்காட்டியுள்ளது.

இந்திய செல்வந்தர்கள் சமூக ஊடகத்தில் பெருமை பேசிக்கொள்ள சட்டத்துக்குப் புறம்பாக அரிய விலங்குகளை நாடுகின்றனர் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர்.

பல மில்லியன் மதிப்புள்ள அரிய வகை விலங்கினக் கடத்தல் வர்த்தகம் வளர்ந்து வருவதாகவும் உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள மியன்மாரிலிருந்து ஓராங் உத்தான் போன்ற விலங்குகள் இந்தியாவுக்குள் கடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நாடு முழுவதும் அரிய விலங்குகள் கண்டறியப்படுவதும் பறிமுதல் செய்யப்படுவதும் பலமுறை நிகழ்ந்துள்ளதாக ‘இந்திய விலங்குகளின் பரிவுமிகு உலகம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சுமந்த் பிந்துமாதவ் கருத்துரைத்தார். அதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.

போர்னியோ தீபகற்பத்தையும், சுமத்ரா தீவையும் பூர்வீகமாகக் கொண்ட ஓராங் உத்தான் குரங்குகள் மலேசியா, புருணை ஆகிய நாடுகளின் காடுகளிலும் காணப்படுவன.

இருப்பினும் அவ்வினக் குரங்குகளின் குட்டிகள் இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் பாலசூர் காடுகளில் அண்மையில் மீட்டெடுக்கப்பட்டன.

ஒன்று முதல் ஒன்றரை வயது உள்ள அவற்றை மீண்டும் இந்தோனீசியாவுக்குத் திருப்பித் தரும்படி அந்நாடு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

‘உயரும் அரிய விலங்கினக் கடத்தல் வர்த்தகம்’ என்ற பெயரில் 2026 ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் பிந்துமாதவின் குழு, சட்டத்துக்கு எதிரான அந்நடவடிக்கை அதிகரித்துள்ளதைத் தெளிவாக விவரித்துள்ளது.

இந்தியாவின் அரிய விலங்குகளின் கடத்தல் சந்தை மதிப்பு 2024ல் $54.3 மில்லியன் (US $42.6 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிய குரங்குக் குட்டிகள் தென்கிழக்காசியாவின் மழைக்காடுகளில் இருந்து இந்தியாவுக்குள் அதிகமாகக் கடத்தப்படுகின்றன.

இணையத்தில் பின்தொடர்பவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தியாவின் சமூக ஊடகத்தில் புகழ்பெற்ற நபர்கள் அரிய வகை விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதை ஊக்குவிப்பதாக இந்திய வனவிலங்குக் குற்றத் தடுப்பு முகவையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்