இந்தோனீசியா: கப்பலில் கடத்தப்பட்ட 1.1 டன் ‘கெட்டமைன்’ போதைப்பொருள் சிக்கியது

இந்தோனீசியா: கப்பலில் கடத்தப்பட்ட 1.1 டன் ‘கெட்டமைன்’ போதைப்பொருள் சிக்கியது

படம்: ஏஎஃப்பி

23 Oct 2026 - 8:24 pm

2 mins read

மேடான்: சுமத்ரா வட்டார கடல்நீரில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் இருந்து 1.1 டன் கெட்டமைன் போதைப்பொருளை இந்தோனீசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களில் இந்தோனீசியாவில் நடத்தப்பட்ட இரண்டாவது ஆகப்பெரிய போதைப்பொருள் வேட்டை இது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, ‘எம்.டி குளோபல் 168’ என்ற எண்ணெய் விநியோகக் கப்பலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வந்ததாகத் தேசிய காவல்துறைத் தலைவர் சுயூதி ஏரியோ செட்டோ கூறினார்.

மங்கோலியக் கொடியைத் தாங்கியிருந்தபோதிலும், மலேசியாவின் ஜோகூர் பாருவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது அந்தக் கப்பல் என்று திரு சுயூதி கூறினார்.

மலேசியாவின் போர்ட் கிளாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலை மலாக்கா நீரிணைப் பகுதியில் காவல்துறையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் வழிமறித்து, பரிசோதனைக்காக வடசுமத்ராவில் உள்ள பெலவான் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர்.

“இந்தச் சோதனை நடவடிக்கையின் மூலம், ‘கெட்டமைன் ஹெச்சிஎல்’ வடிவிலான சட்டவிரோத போதைப்பொருளைக் கூட்டுப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

“58 சாக்குகளில் இருந்த அதன் மொத்த எடை 1.16 டன்,” என்றார் அந்த அதிகாரி.

அந்தச் சம்பவம் தொடர்பில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எழுவர் இந்தோனீசியர்கள். எஞ்சிய ஒருவர் தைவானைச் சேர்ந்தவர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 3.48 டிரில்லியன் ரூபாயா (S$246 மில்லியன்) இருக்கும் என காவல்துறை கணித்துள்ளதாக திரு சுயூதி கூறினார்.

ரியாவு தீவுகளுக்கு அருகே 65 சாக்குகளுக்குள் மறைத்து வைத்து, தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1.3 டன் கெட்டமைன் அடங்கிய கப்பலை இந்தோனீசிய அதிகாரிகள் வழிமறித்து, பறிமுதல் செய்த இரு மாதங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை உட்பட உலகின் ஆகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் இந்தோனீசியாவில் நடப்பில் உள்ளன. இருப்பினும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அங்கு பல ஆண்டுகளாகத் தடை உள்ளது.

குறிப்புச் சொற்கள்
கப்பல்போதைப்பொருள்கடத்தல்