ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியருகே பயணிகள் படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, ஏழு வயதுச் சிறுமி உட்பட ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களாகக் கடலில் தத்தளித்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.
70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்தப் படகு, கடந்த ஜூலை 15ஆம் தேதி, செலாயார் தீவுக்கு அருகே சென்றபோது கடலில் மூழ்கியது.
பலத்த காற்று வீசியதால் தாங்கள் மற்றவர்களிடமிருந்து பிரிந்துவிட்டதாக மீட்கப்பட்ட ஐவரும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, படகு மூழ்கியதை அடுத்துக் காணாமற்போனதாகத் தேடப்பட்ட 25 பேரில் இவர்களும் அடங்குவர்.
“படகு மூழ்கியதும், தங்கள் கைகளுக்குக் கிடைத்த பொருள்களையும் தற்காலிக மிதவைப் பொருள்களையும் கொண்டு அவர்கள் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றனர்,” என்று உள்ளூர் தேடல், மீட்புப் பணி அதிகாரி முகமது ஆரிஃப் அன்வார், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“அவர்கள் நெகிழிக் கலன்களையும் தக்கைத் (cork) துண்டுகளையும் கயிறுகளால் பிணைத்து, அதன்மேல் ஏறி அமர்ந்து கடலில் மிதந்தனர்,” என்றார் அவர்.
கடலில் மிதந்து கொண்டிருந்த அவர்களைச் சனிக்கிழமை கண்டுபிடித்து மீட்ட உள்ளூர் மீனவர்கள் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
போதிய உணவோ தண்ணீரோ இன்றி நாள்கணக்கில் கடலில் மிதந்ததால் அவர்கள் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் காணப்பட்டனர். இருப்பினும், தங்களிடம் இருந்த உடனடி நூடல்ஸ், பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு அவர்கள் உயிர் பிழைத்ததாகத் திரு ஆரிஃப் கூறினார்.
காணாமற்போன மற்றவர்களைத் தேடும் பணியில் ஐந்து பெரிய கப்பல்கள், ஓர் உளவு விமானம், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூழ்கிய படகில் 50 பேர் மட்டுமே இருந்ததாக அதன் அதிகாரபூர்வப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தீவிர விசாரணைக்குப் பிறகு அதில் மொத்தம் 78 பேர் பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

