அமைதி வாரியத்திற்கு 1.28 பி. அமெரிக்க டாலர் செலுத்த முடியாது: இந்தோனீசியா

அமைதி வாரியத்திற்கு 1.28 பி. அமெரிக்க டாலர் செலுத்த முடியாது: இந்தோனீசியா

2 mins read
c179295f-ed11-4465-8e4e-7d01a8126a99
கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகச் சேர்வதற்கான ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை ($1.28 பில்லியன்) இந்தோனீசியா செலுத்தாது என அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வாரியத்தில் இணைந்ததற்காக உள்நாட்டில் கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட நிலையில், தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தோனீசிய அதிபர் அலுவலக யூடியூப் ஒளிவழியில் மார்ச் 22ஆம் தேதி வெளியான அறிக்கையில், டிரம்ப்பின் அமைதி வாரியத்திற்கு அமைதிப்படை வீரர்களை அனுப்ப மட்டுமே இந்தோனீசியா ஒப்புக்கொண்டுள்ளதாகத் திரு பிரபோவோ தெரிவித்தார்.

காஸாவில் இரு ஆண்டுகளாக நீடித்த போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர, கத்தார், எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து டிரம்ப் நிர்வாகம் கடந்த அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக அமைதி வாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அமைதி வாரியத்தில் சேர்ந்ததற்கும் காஸாவிற்கு 8,000 அமைதிப்படை வீரர்களை அனுப்ப உறுதியளித்ததற்கும் இந்தோனீசியாவின் முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் இந்தோனீசிய அதிபர் கலந்து கொண்டார்.

இருப்பினும், பாலஸ்தீனர்களுக்கு அது பயனளிக்கவில்லை என்றாலோ அல்லது இந்தோனீசியாவின் தேசிய நலன்களுக்கு முரணாக இருந்தாலோ, அதிலிருந்து விலகிவிடுவேன் என அவர் பின்னர் தெரிவித்தார்.

இந்நிலையில், “அமைதி வாரியத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க விரும்பியதில்லை. அதுபோன்ற எவ்வித நிதி சார்ந்த வாக்குறுதிகளையும் தாம் அளிக்கவில்லை,” என மார்ச் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் திரு பிரபோவோ தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்