ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள எல்லா முதலீடுகளையும் தமது அரசாங்கம் மதிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 8) நான்கு நிக்கல் ஆலைகளின் வர்த்தகச் செயல்பாடுகளுக்கும் வேடா பேயில் தொழில்துறைப் பூங்கா ஒன்றில் ஆறு திட்டங்களுக்குமான தொடக்க நிகழ்ச்சியில் திரு பிரபோவோ பேசினார்.
“எங்கிருந்து வந்தாலும் சரி, எல்லா முதலீடுகளையும் மதித்துப் பாதுகாக்க இந்த இந்தோனீசிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதை நான் வலியுறுத்துகிறேன்,” என்றார் பிரபோவோ.
“நமது பங்காளித்துவங்களை முடிந்தவரை பாதுகாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நமது பங்காளிகளுக்கு ஆதரவளிப்பது என்பது இந்தோனீசிய மக்களின் கெளரவமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது உலோகத் துறைக்கும் ஸ்மெல்டிங் எனப்படும் கலவை உலோகத்திலிருந்து அடிப்படை உலோகத்தைப் பிரிக்கும் முறைக்கான துறைக்கும் இந்தோனீசியா பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக சீனாவிடமிருந்து அது முதலீடுகளை ஈர்த்திருக்கிறது.
இந்தோனீசியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள், வர்த்தகத்துக்கு மேலும் உகந்த கொள்கைகளைச் செயல்படுத்துமாறு முன்னதாக இவ்வாண்டு கடிதம்வழி கேட்டுக்கொண்டன. அதிக வரித் தொகை, புதிய விலை முறை போன்றவற்றால் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாவதாக சீன நிறுவனங்கள் எச்சரித்தன.
இந்தோனீசியா, உலகில் ஆக அதிக அளவில் நிக்கல் கையிருப்பைக் கொண்டுள்ள நாடாகும். மேலும், அது உலகில் ஆக அதிக அளவில் நிக்கல் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடும்கூட. உலக அளவில் விநியோகிக்கப்படும் நிக்கல் பொருள்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டுப் பொருள்கள் இந்தோனீசியாவிலிருந்து அனுப்பப்படுபவை.
