ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை எதிர்த்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டையும் அவர்கள் குறைகூறினர்.
‘நொடித்துப்போகும் நிலைக்கு இந்தோனீசியா கொண்டு செல்லப்படுகிறது’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.
மத்திய ஜகார்த்தாவில் உள்ள பண்டரான் எச்ஐ என்ற இடத்தை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல முடியாதபடி காவல்துறை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தியதாக ஒருசிலர் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைச் சமாளிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் 500 ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் ஜகார்த்தா காவல்துறைப் பேச்சாளர் பூடி ஹெர்மான்டோ.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதையும் ஆயுதங்கள் வைத்திருப்பதையும் தவிர்க்கும்படி திரு பூடி அறிவுறுத்தினார்.
பேரணியில் கலந்துகொள்ள பிளாஸா இந்தோனீசியா என்ற இடத்தை நோக்கி மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சென்ற சில பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ‘டெம்போ’ என்ற உள்ளூர் ஊடகம் கூறியது.
பிளாஸா இந்தோனீசியாவைச் சுற்றி கண்காணிப்பு வாகனங்களிலும் தீயணைப்பு வாகனங்களிலும் குண்டுகள் துளைக்காத உடைகளில் காவல்துறை அதிகாரிகள் வரிசையாக நிற்பதாக பிஸ்னிஸ் இந்தோனீசியா ஊடகம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வட்டாரத்தில் 6,000க்கும் அதிகமான அதிகாரிகள் இருந்ததாகவும் அது தெரிவித்தது.
இந்தோனீசியாவில் கடந்த ஆண்டு மூண்ட கடுமையான ஆர்ப்பாட்டங்களால் அதிபர் பிரபோவோ, தமது நிதியமைச்சரைப் பதவியிலிருந்து விலக்கினார்.
2024ஆம் ஆண்டு மூண்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களால், தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை நாடாளுமன்றம் கைவிட வேண்டியதாயிற்று.
கிரேட்டர் ஜகார்த்தாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் ஜூன் 12 நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் அளவைப் பொறுத்து, போக்குவரத்து மாற்றங்களும் சாலை மூடல்களும் அமல்படுத்தப்படலாம்.

