ஜகார்த்தா: ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தபோது, இந்தோனீசிய அரசாங்கம் டிக்டாக் செயலியைத் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது. நேரடியாக ஒளிபரப்பக்கூடிய காணொளிகளின் செயல்பாட்டுத் தரவுகளை வழங்காததால் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி போராட்டங்கள் பற்றிய தரவுகளை டிக்டாக் அதேநாளன்று பகிர்ந்துள்ளதால், அதன்மீது விதிக்கப்பட்ட உள்ளூர் செயல்பாட்டு உரிமத்துக்கான தற்காலிகத் தடை அக்டோபர் 4ம் தேதி நீக்கப்பட்டுள்ளது என்று தகவல், மின்னிலக்க விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை அமைச்சின் தலைமை இயக்குநர் அலெக்சாண்டர் சபார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்தோனீசியாவில் 100 மில்லியன் மக்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துகின்றனர். உலகிலேயே ஆக அதிக டிக்டாக் பயனாளர்கள் பட்டியலில் இந்தோனீசியா இரண்டாம் நிலையில் உள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக்கின் உரிமையாளர் ஆகும்.
இதுபற்றி டிக்டாக் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை. அச்செயலியைப் பயன்படுத்தும் சந்தைகளில் இயங்கும் சட்டங்களைத் தாம் மதிப்பதாக பொது அறிவிப்பு ஒன்றை பைட்டான்ஸ் நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்தது.
இந்தோனீசியாவில் பைட்டான்ஸ் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
இணைய வர்த்தகத் தளமான ‘டொகோபீடியா’ (Tokopedia) என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியதை அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறியதற்காக செப்டம்பர் 29ஆம் தேதி, டிக்டாக் நிறுவனத்துக்கு இந்தோனீசிய அரசாங்கம் $1.6 மில்லியன் அபராதம் விதித்தது.