ஜகார்த்தா: இந்தோனீசிய மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோருக்கு இலவச உணவு வழங்கும் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் திங்கட்கிழமை (ஜனவரி 6) தொடங்கப்பட்டது. அதன் முதல் நாள் 570,000 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது திரு பிரபோவோவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இத்திட்டம் விளங்கியபோதும், ஆரவாரம் எதுவுமின்றி தொடக்கம் கண்டது. இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் உணவு தயாரிக்கும் பணிகளில் 190 நிறுவனங்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டன.
280 மில்லியன் பேரைக் கொண்ட இந்தோனீசிய மக்கள்தொகையில், 2029க்குள் 82.9 மில்லியன் பேரின் வயிற்றை நிரப்ப இலக்கு கொண்டுள்ள இத்திட்டம் முழுவீச்சுடன் இடம்பெறுவதில் இமாலயச் சவால் காத்திருக்கிறது.
திரு பிரபோவோவின் இந்த முக்கியத் திட்டம், சர்ச்சைகளையும் ஈர்த்தது. ஐந்து ஆண்டு காலத்தில் இதற்கு $28 பில்லியன் செலவாகும் என முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்தது. நிதிச் சிக்கனத்துக்குப் பெயர்போன இந்தோனீசியாவின் நற்பெயருக்கு இது களங்கம் விளைவிக்கக்கூடும் எனப் பொருளியல் நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்திருந்தனர்.
ஆனால், கடந்த மாதம் இத்திட்டத்தைத் தற்காத்துப் பேசிய திரு பிரபோவோ, சிறுவர்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்வதிலும் வட்டார அளவில் இந்தோனீசியப் பொருளியலை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வதிலும் இத்திட்டம் உத்திபூர்வமானது என வர்ணித்தார்.
இவ்வாண்டு 15 மில்லியன் பேருக்கு உணவளிக்க முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு 71 டிரில்லியன் ரூப்பியா ($4.39 பி.) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உணவைத் தயாரித்து, அதை விநியோகிக்க உதவும் அரசாங்கமும் ராணுவமும் இது தொடர்பில் முன்னோட்டத் திட்டங்களை நடத்தி வந்துள்ளன.
உணவைப் பெறுவோரின் எண்ணிக்கை மார்ச் மாதத்துக்குள் படிப்படியாக மூன்று மில்லியனாக அதிகரித்து, ஆண்டு முழுவதும் அது படிப்படியாக உயரும் என்று அதிபர் அலுவலகப் பேச்சாளர் டெடெக் பிரயுடி தெரிவித்தார்.