மேடான்: இந்தோனீசியாவில், பாதுகாக்கப்பட்ட சூரியக் கரடியின் சடலத்தை இணையத்தில் விற்றதற்காக, மேடான் மாவட்ட நீதிமன்றத்தில் 49 வயது ஆடவருக்கு ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் 250 மில்லியன் ருப்பியா (S$18,800) அபராதமும் விதிக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார்.
அலி ஷபானா முன்தெ என்ற அந்த ஆடவர் அவரது குற்றச்செயலிலிருந்து பணம் பெறவில்லை என்பதால் நீதிபதிக் குழு அபராதத் தொகையை விதிக்கவில்லை.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின்கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி கூறினார்.
தண்டனையைப் பற்றிப் பேசியபோது அதனை ஏற்றுக்கொள்வதாக அலி கூறினார்.
சென்ற ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி, மேடானின் ஜாலான் சுங்காலில் உள்ள பேருந்து நுழைவுச் சீட்டுச் சாவடி ஒன்றில், மேடான் நகரக் காவல்துறைக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அலியைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டபோது, சூரியக் கரடி இருந்த பெரிய பெட்டியை அவர் தூக்கிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சூரியக் கரடியை ஃபேஸ்புக்கில் தெரிந்த ஒரு நபரிடம் 7 மில்லியன் ரூப்பியாவுக்கு விற்க அவர் திட்டமிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அலி, சூரியக் கரடி மட்டுமல்லாமல், மற்ற விலங்குகளின் பாகங்களையும் 2022 முதல் விற்றுவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

