ஜகார்த்தா: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே தொடரும் போர் நிறுத்தப்படவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கூறப்போவதாக இந்தோனீசிய தலைவர் ஜோக்கோ விடோடோ தெரிவித்திருக்கிறார்.
அவர்கள் இருவரும் வரும் திங்கட்கிழமையன்று சந்திக்கவுள்ளனர்.
திரு ஜோக்கோவி வரும் வெள்ளிக்கிழமை, போர் குறித்து நடைபெறவிருக்கும் அனைத்துலக மாநாட்டுக்காக சவூதி அரேபிய தலைநகர் ரியாதுக்குச் செல்லவிருக்கிறார்.
“ஹமாஸ்-இஸ்ரேல் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று நான் அதிபர் பைடனிடம் கூறுவேன்,” என்று திரு ஜோக்கோவி தெரிவித்தார். அவர் மேல்விவரங்களைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்தோனீசியா பல நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து உடனடி சண்டைநிறுத்தத்திற்குக் கோரிவருகிறது. காஸாவிற்கு மனிதாபிமான உதவியையும் அது வழங்கியுள்ளது.
இதற்கிடையே, திரு ஜோக்கோவியும் திரு பைடனும் அனைத்துலகச் சட்டத்தைக் கட்டிக்காப்பதற்கான வழிகள் குறித்தும் கலந்துபேசுவார்கள் என்று முன்னதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் கூறினார்.