$610 மில்லியன் மடிக்கணினி ஊழல்; முக்கிய மின்னணு ஆதாரங்கள் பறிமுதல்

$610 மில்லியன் மடிக்கணினி ஊழல்; முக்கிய மின்னணு ஆதாரங்கள் பறிமுதல்

சூடுபிடிக்கும் வழக்கு - இந்தோனீசியாவின் முன்னணி நிறுவனமான ‘கோடூ கோஜெக்‘ நிறுவனத்தில் சோதனை
படம்: இணையம்

12 Jul 2025 - 5:58 pm

2 mins read

குரோம்புக் மடிக்கணினிகளை அரசாங்கம் வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக அறியப்படுகிறது.

இதன் தொடர்பில் இந்தோனீசிய அதிகாரிகள் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான ‘கோடூ கோஜெக் டோக்கோபீடியா‘ அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

தெற்கு ஜகார்த்தாவில் உள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) சோதனை நடத்தியதாகத் தலைமை சட்ட அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர்  தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சோதனையின்போது முக்கிய மின்னணு  ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

‘‘கைப்பற்றப்பட்ட பொருட்களில் ‘ஃபிளாஷ் டிரைவ்‘ எனப்படும் விரலி, இதர தரவு சேமிப்பு மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் அடங்கும்,” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கூறிய இவ்வழக்கு, 2019 முதல் 2022 வரை கல்வி, கலாசாரம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் கிட்டத்தட்ட 9.9 டிரில்லியன் ரூப்பியா (அமெரிக்க டாலர் $610 மில்லியன்) மதிப்பிலான வரவு செலவுத் திட்டத்தின்கீழ் ‘குரோம்புக் வகை கணினிகள்’ வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டு தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு என்பது நினைவுகூரத்தக்கது.

இது அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜோக்கோ ஜோகோவி விடோடோவின் ஆட்சிக் காலத்தில் நாடுத் தழுவிய மின்னிலக்கமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

மேலும் இத்திட்டம் அரசுப் பள்ளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

‘குரோம்புக்‘ கணினிகளுக்குப் பெரும்பாலான நேரத்தில் அதிவேக இணையச் சேவை தேவைப்படும்.

ஆனால் நாடு முழுவதும் நிலவும் சீரற்ற இணைய சேவையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இவ்வகை ‘குரோம்புக்‘ சாதனங்களுக்கான தேவை குறைவாகவே இருப்பதாகவும் முந்தைய அறிக்கைகள் விவரித்திருந்தன.

தனியார் வாகனச் சேவை வழங்கும் ‘கோஜெக்‘ கல்வி, கலாசாரம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னாள் அமைச்சரான நதீம் மக்காரீம் என்பவரால் நிறுவப்பட்டது.

பிறகு ‘கோஜெக்‘ இணைய வணிக நிறுவனமான ‘டோக்கோபீடியா’வுடன்’ இணைந்து 2021ஆம் ஆண்டு ‘கோடூ கோஜெக் டோக்கோபீடியா‘வாக அது உருமாறியது.

கடந்த ஜூன் 23 அன்று நதீமை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவரிடம் இவ்வகை கணினி கொள்முதல் செயல்முறை தொடர்பான ஏறத்தாழ 31 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 40 சாட்சிகள் இதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நதீம் பகிரங்கமாக மறுத்துள்ள போதிலும், இவ்வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்