மேடான்: சுமத்ராவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் நெருக்கடி நிலையை இந்தோனீசிய மத்திய அரசாங்கம் அறிவிக்க மறுத்தது மக்களின் சினத்தைத் தூண்டியுள்ளது.
நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததால் அனைத்துலக நிவாரண உதவிகளைச் சுமத்ராவால் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாக அளவில் மீட்புப் பணியின் சுமை அதிகரித்துள்ள நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் வட்டாரத் தலைவர்கள் இக்கட்டான சூழலை எதிர்கொள்கின்றனர்.
சுமத்ராவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததால் வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை வட்டாரத் தலைவர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 18ஆம் தேதி வடக்கு சுமத்ராவில் உள்ள மேடான் நகராட்சி 30 டன் கிலோகிராம் அரசியையும் 300 பொட்டங்களில் வந்த பிள்ளைகளுக்கான பொருள்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள், வழிபாட்டுப் பொருள்கள் ஆகியவற்றை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் திருப்பி அனுப்பியது.
மத்திய அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின் பெயரில் திருப்பி அனுப்பியதாக நகராட்சி சொன்னது.
இந்தோனீசியாவின் ஷைமா அல்ஹெப்சியில் உள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுத் தூதரகம் மூலம் இம்மாதம் 13ஆம் தேதி அந்த நிவாரணப் பொருள்கள் மேடான் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தற்காப்பு அமைச்சு, தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு ஆகியவற்றுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு நிவாரணப் பொருள்களைத் திரும்ப கொடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மேடான் மேயர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் நிவாரணப் பொருள்கள் திரும்பி அனுப்பப்பட்டிருக்கக்கூடாது என்றும் வெளிநாட்டு உதவிகளைத் தடுக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் மக்கள் குறைகூறினர்.
அது உள்ளூர்வாசிகளின் சினத்தையும் தூண்டியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறைவான உதவியுடன் தவித்துவரும் வேளையில் அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்தது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் சாடினர்.

