வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள புதிய சகாப்தத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டாடினார்.
திரு பைடன், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகையில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான அணுக்கமான உறவை மறுஉறுதிப்படுத்தினார்.
உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியா, தென்கிழக்காசியாவில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
தென்கிழக்காசியாவில் வாஷிங்டனும் பெய்ஜிங்கும் செல்வாக்கை அதிகரிக்கப் போராடிவரும் நிலையில், “அமெரிக்காவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும்,” என்று திரு விடோடோவுக்கு அருகில் அமர்ந்தவாறு திரு பைடன் கூறினார்.
இருப்பினும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் இருவருக்கும் இடையே மாறுபட்ட நிலைப்பாடு இருந்ததற்கான அறிகுறிகளும் தென்பட்டன.
காஸாவில் நடக்கும் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவந்து சண்டைநிறுத்தத்தை எட்ட மேலும் அதிகம் செய்யுமாறு திரு பைடனை அதிபர் விடோடோ கேட்டுக்கொண்டார்.
இந்தோனீசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து முக்கியமாக பேசப்படவேண்டியிருந்த அந்தச் சந்திப்பில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் முக்கிய விவகாரமாக இடம்பெற்றது.
“காஸாவில் நடக்கும் அட்டூழியங்களை நிறுத்த மேலும் அதிகம் செய்யவேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தோனீசியா வேண்டுகோள் விடுக்கிறது,” என்று திரு விடோடோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“மனிதாபிமான காரணங்களுக்குச் சண்டைநிறுத்தம் நிச்சயம் ஏற்படவேண்டும்,” என்றார் அவர்.
சென்ற வாரயிறுதியில் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் அரபு, முஸ்லிம் தலைவர்கள் இடையிலான கூட்டுச் சந்திப்பில் திரு பைடனிடம் கடுமையான செய்தியைக் கொண்டுசெல்லப் போவதாக அதிபர் விடோடோ சென்ற ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
போர் தொடர்பில் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அபாசிடமிருந்து வந்த செய்தி ஒன்றையும் அதிபர் பைடனிடம் தெரிவிக்கப்போவதாக அவர் சொல்லியிருந்தார்.
இருப்பினும், திரு பைடன் இந்தோனீசியா உடனான ஒத்துழைப்பை ஆக உயரிய நிலைக்கு அதிகரிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தினார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சீனா உறுதியான நிலையைக் கொண்டுள்ள வேளையில், அங்கு கூட்டணியை வளர்க்கும் முயற்சிகளில் வாஷிங்டன் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.