சிடாவர்ஜோ: இந்தோனீசியாவில் பள்ளி ஒன்று இடிந்து விழுந்ததில் பிள்ளைகள் பலரை இன்னும் காணவில்லை.
காணாமற்போன மாணவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு பெற்றோர், அதிகாரிகளுக்குக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இடிபாடுகளுக்குக்கீழ் சிலர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதை மீட்புப் பணியாளர்கள் அறிகின்றனர்.
ஜாவா தீவில் பல தளங்கள் உள்ள பள்ளி இடிந்து விழுந்ததில் சுமார் 91 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. திங்கட்கிழமை (செப்டம்பர் 29) பிற்பகலில் மாணவர்கள் வழிபாட்டுக்காக ஒன்றுகூடியபோது பள்ளி இடிந்து விழுந்தது.
பள்ளி இடிந்து விழுந்ததில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர். எனினும், பள்ளிப் பதிவுகளின்படி 91 பேர் இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தேசிய பேரிடர், பேரிடர்த் தடுப்பு அமைப்பின் பேச்சாளர் அப்துல் முஹாரி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) அறிக்கையில் தெரிவித்தார்.
புதன்கிழமை (அக்டோபர் 1) பெரும் சோகத்துக்குள்ளாகியிருக்கும் பெற்றோர் இடிபாடுகளைச் சுற்றி பிள்ளைகளைப் பற்றிய செய்திக்காகக் காத்திருக்கின்றனர். மீட்புப் பணிகள் துரிதப்படத்தப்பட வேண்டும் என்று பெற்றோர் சிலர் குரல் கொடுக்கின்றனர்.
மீட்புப் பணிகள் சிக்கல் நிறைந்து இருப்பதாக இந்தோனீசிய தேசிய தேடல், மீட்பு அமைப்பின் தலைவர் முகம்மது சியாஃபி’இ தெரிவித்துள்ளார். இடிபாடுகளைத் தோண்டுவதுகூட சவாலானது என்று அவர் விவரித்தார். அந்நடவடிக்கையால் நிலச்சரிவுகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டினார்.
உருவாக்கப்படும் எந்தச் சுரங்கமும் சுமார் 60 சென்டிமீட்டர் அகலமாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற பேரிடர்களில் சிக்கியவர்கள் பொதுவாக 72 மணிநேரம் வரை உயிர்பிழைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதுண்டு. இந்நிலையில் உணர்க்கருவிகள் பொருத்தப்பட்டுள்ள வானூர்திகள் உயிர் பிழைத்திருக்கக்கூடியவர்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அந்த 72 மணிநேரக் ‘கெடு’ முடிவுக்கு வரவிருக்கிறது. உயிர் பிழைத்திருக்கக்கூடியவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளுக்குள் கேமராக்கள் பயன்படுத்துவதை ஏஎஃப்பி செய்தியாளர்கள் கண்டிருக்கின்றனர்.