காஸாவுக்கு 4,000 வீரர்களை அனுப்பும் இந்தோனீசியா

காஸாவுக்கு 4,000 வீரர்களை அனுப்பும் இந்தோனீசியா

2 mins read
f90841d5-6e02-480d-b67b-8be46d5df53c
காஸா செல்லும் இந்தோனீசிய வீரர்கள் மனிதநேய உதவிகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவர். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: காஸாவுக்கு 4,000 ராணுவ வீரர்கள் வரை அனுப்பிவைக்க இந்தோனீசியா தயாராகிக்கொண்டிருப்பதாக அந்நாட்டு மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் மூலம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த அமைதிக் குழுவுக்கு இந்தோனீசியா வலுவான ஆதரவை வெளிப்படுத்துகிறது.

அமைதிக் குழுவில் ஏறக்குறைய 9,000 வீரர்கள் பணியமர்த்தப்படுவர் என்று இந்தோனீசிய அதிகாரி பிப்ரவரி 11ஆம் தேதி குறிப்பிட்டார்.

மனிதநேய உதவிகள், மருத்துவ உதவிகள், சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் மட்டுமே இந்தோனீசிய வீரர்கள் கவனம் செலுத்துவர் என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 19ஆம் தேதி இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வா‌ஷிங்டனுக்குப் புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக வீரர்கள் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.

அமெரிக்காவுக்கான பயணத்தின்போது திரு டிரம்ப்புடன் பதில் வரி குறித்த உடன்பாடு ஒன்றில் திரு பிரபோவோ கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனீசியா குறைந்த வரிகளுடன் அமெரிக்கா உற்பத்தி செய்யாத காலணி, துணிமணி, ஆடைகள் போன்ற பொருள்களுக்கு முழுமையான வரி நீக்கத்தையும் கோருகிறது.

காஸாவில் அமைதியை நிலைநாட்ட 20,000 அல்லது அதற்கும் அதிகமான வீரர்களை அங்கு அனுப்பிவைக்க இந்தோனீசியா ஆயத்தமாக இருப்பதாய் திரு பிரபோவோ ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுக் கூட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.

அதையடுத்து காஸாவுக்கு வீரர்களை அனுப்ப இந்தோனீசிய ராணுவம் தயாராகிறது.

“ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வீரர்களை அனுப்ப ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன,” என்றார் ராணுவப் பேச்சாளர் கர்னல் அகுங் சப்டொவாடி.

டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் திரு டிரம்ப் அறிமுகம் செய்த அமைதிக் குழுவுக்கான சாசனத்தில் ஜனவரி 22ஆம் தேதி திரு பிரபோவோ கையெழுத்திட்டார். அந்தச் சாசனம் காஸாவுக்காகத் தயாரிக்கப்பட்டது என்றபோதும் எதிர்காலப் பூசல்களுக்கும் அதைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்கா சொன்னது.

குறிப்புச் சொற்கள்