ஜகார்த்தா: இந்தோனீசியாவின் காடுகளிலும் நிலப்பகுதிகளிலும் பெரிய அளவில் எரியும் தீயை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
தீயை அணைக்க மேலும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், தீக்குக் காரணமான நிறுவனங்கள்மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் கொடுத்துவருகின்றனர்.
பல ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான காட்டுத்தீச் சம்பவங்களை இந்தோனீசியா எதிர்கொண்டுவருகிறது. இந்நிலையில் பொதுமக்களிடையே கோபம் கூடிவருகிறது.
பருவநிலை மாற்றம்
எல் நினோ பருவநிலை முறையால் ஏற்பட்டுள்ள வறட்சியால், பெரிய அளவில் காட்டுப் பகுதிகளும் மக்குநிலப் பகுதிகளும் (peatland) தீப்பிடித்துக்கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளது.
நோய்வாய்ப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நிலவரப்படி இந்தோனீசியாவின் ஏழு மாநிலங்களில் இந்தத் தீச்சம்பவங்களால் தொடர்பான நோய்களுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 283,270ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பதிவான 113,336ஐவிட இருமடங்குக்கும் அதிகமானதாகும்.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
புகைமூட்டம் தென்கிழக்காசிய வட்டாரத்தில் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள்
மத்திய கலிமந்தானில் உள்ள இரு நகரங்களில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீயைக் கையாள மேலும் வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர்.
தென் சுமத்ராவின் தலைநகர் பலெம்பாங்கில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நூற்றுக்கணக்கான மாணவர்கள் அம்மாநில ஆளுநரின் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேசியப் பேரிடர் அறிவிப்பு இல்லை
இந்தத் தீச்சம்பவங்களைத் தேசியப் பேரிடராக இந்தோனீசியா இன்னும் அறிவிக்கவில்லை. அவ்வாறு செய்யுமாறு பாதிக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும் அந்நடவடிக்கை எடுக்கப்படாததால் அது தொடர்பான அதிருப்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைக்க முயன்றவர்கள் உயிரிழப்பு
இதற்கிடையே, இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள அந்நாட்டின் தேசியப் பூங்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது நால்வர் உயிரிழந்தனர். இந்தோனீசிய வனப்பகுதி அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) இத்தகவலை வெளியிட்டது.
கிழக்கு ஜாவாவில் புரோமோ தெங்கர் செமெரு தேசியப் பூங்காவில் வியாழக்கிழமை தீயுடன் போராட முடியாமல் அந்த நால்வரும் உயிரிழந்ததாக வனப்பகுதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மாண்டோரின் அடையாளம் குறித்த விவரங்களை அமைச்சு வழங்கவில்லை.
மேலும் இருவருக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டன.
