இந்தோனீசிய நிலநடுக்கம்: உதவிக்குக் காத்திருக்கும் பல்லாயிரம் மக்கள்

இந்தோனீசிய நிலநடுக்கம்: உதவிக்குக் காத்திருக்கும் பல்லாயிரம் மக்கள்

2 mins read
af7e97b8-0740-459c-b403-f9ac5e062a4d
இந்தோனீசியாவின் கிழக்கில் உள்ள ஃபுளோரெஸ் தீவில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon
நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

ருதெங்: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபுளோரெஸ் தீவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 51 பேர் மரணமடைந்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான வீடுகளும் கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன. ஃபுளோரெஸ் தீவை 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதும் அங்கிருந்து 5,000க்கும் மேற்பட்டோர் வெளியேறிவிட்டனர்.

இந்தோனீசிய தேசியப் பேரிடர் முகவையின் பேச்சாளர் பெர்தொன் சுவார் நிலநடுக்கத்தின் விவரங்களைச் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) உறுதிப்படுத்தினார். நிலநடுக்கத்துக்குப் பிறகு 341 நில அதிர்வுகள் உணரப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு நுசா தெங்காரா வட்டாரத்தில் 33 பேருக்கு கடுமையாகவும் 77 பேருக்கு சிறிய அளவிலும் காயங்கள் ஏற்பட்டதாக சுகாதாரத் துணை அமைச்சர் பெஞ்சமின் பவுலஸ் தொலைக்காட்சி சந்திப்பில் கூறினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் உதவிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மின்சாரமும் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களை அடைவதற்காக இருந்த ஒரே அவசரகாலத்துக்கான சாலையும் வாகனங்கள் செல்லமுடியாதபடி தடைபட்டுக் கிடக்கிறது.

உணவு, குடிநீர், மருந்துகள், குழந்தைகளுக்கான அணையாடைகள் (டையபர்ஸ்) உள்ளிட்ட பல பொருள்கள் உடனடியாகத் தேவைப்படுவதாக நங்கஹலே கிராமத்தைச் சேர்ந்த 55 வயது உம்ரி என்ற குடியிருப்பாளர் தெரிவித்தார்.

அச்சத்தால் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்த்து, அவரைப் போல பல இந்தோனீசியர்கள் கடந்த 24 மணிநேரமாக மலை உச்சிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதே ஃபுளோரெஸ் தீவில் 1992ல் நடந்த நிலநடுக்கத்திலும் அதன் பிறகு ஏற்பட்ட சுனாமி அலைகளின் தாக்கத்திலும் 2,500 பேர் உயிரிழந்தனர்.

தற்காலிக முகாம்கள், போர்வைகள், படுக்கைகள், மின்சாரம் வழங்கும் இயந்திரங்கள் என பல வசதிகள் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது என பேரிடர் முகவையின் பேச்சாளர் பெர்தொன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்