இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் சியாஞ்சுர் நகரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 80 மாணவர்கள் அரசாங்கத்தின் இலவச உணவை உட்கொண்டதையடுத்து நோய்வாய்ப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின் வீடு திரும்பினர்.
கிட்டத்தட்ட 80 மில்லியன் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை இந்தோனீசியா செயல்படுத்தி வருகிறது.
அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அந்த முக்கிய கொள்கை தொடர்புடைய இரண்டாவது நச்சுணவு சம்பவம் இது.
உணவைத் தயாரிக்கும்போது ஏற்பட்ட கனவக்குறைவே நச்சுணவுக்குக் காரணம் என்று விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உணவைச் சமைப்பவர்கள் முதற்கொண்டு அதைப் பொட்டலமிட்டு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வரை சம்பவம் தொடர்பான அனைவரிடமும் விசாரணை நடத்துவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவுப் பொட்டலத்தில் இருந்த கோழியிலிருந்து துர்நாற்றம் வந்ததாக 16 வயது மாணவர் உள்ளூர் ஊடகத்திடம் கூறினார். “எனக்கு மயக்கம் ஏற்பட்டதோடு வாந்தியும் வந்தது,” என்றார் அவர்.
உலகளவில் செயல்படுத்தப்படும் இலவச உணவுத் திட்டம் மாணவர்களின் உடல்நலன், கற்றல் போன்ற அம்சங்கள் மேம்படுவதற்குக் கைகொடுத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் இந்தோனீசியாவின் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான இலவச உணவுத் திட்டம் உணவு பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் தூண்டும் வகையில் இருக்கிறது.
ஜனவரியில் தொடங்கிய திட்டம் மூலம் 26 மாநிலங்களில் உள்ள 550,000 மாணவர்களுக்கு இலவச உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதே மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஏற்பட்ட நச்சுணவு சம்பவங்களால் இலவச உணவு குறித்த அச்சத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வாரம் சியாஞ்சூரில் ஏற்பட்ட நச்சுணவு சம்பவத்தையடுத்து உணவு பாதுகாப்பு நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்த அதிகாரிகள் உறுதியளித்தனர்.