காட்டுத்தீ பாதிப்புக்காக சிங்கப்பூர், மலேசியாவிடம் இந்தோனீசிய அதிபர் மன்னிப்பு

காட்டுத்தீ பாதிப்புக்காக சிங்கப்பூர், மலேசியாவிடம் இந்தோனீசிய அதிபர் மன்னிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2026 - 9:50 am

1 mins read

மணிலா: இந்தோனீசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சிங்கப்பூர், மலேசிய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) வருத்தம் தெரிவித்தார்.

தமது அரசாங்கத்தின் சார்பில் சிங்கப்பூரிடமும் மலேசியாவிடமும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், அந்தத் தீச்சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியான் கூட்டத்தின் அமர்வு ஒன்றில் அதிபர் பிரபோவோ இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டதாக இந்தோனீசிய அதிபர் மாளிகை தெரிவித்தது.

காட்டுத்தீ சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்கள்மீது இந்தோனீசிய அரசாங்கம் ஏற்கெனவே கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த புதிய அமைப்பு ஒன்றை அமைக்க இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, காட்டுத்தீப் பிரச்சினையைக் கையாள்வதற்கு இந்தோனீசியா மேற்கொண்ட நடவடிக்கைகளை அந்நாடு மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்ததாகப் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரசா லசாரோ கூறினார்.

எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆசியான் ஒருங்கிணைப்பு நிலையத்தை உறுதிப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகள் முன்னுரிமை அளிக்குமாறு ஆசியான் தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தோனீசியா மிகத் தீவிரமான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது. இதனால், முக்கியமாக சுமத்ரா, போர்னியோ, பாப்புவா ஆகிய தீவுகளில் உள்ள ஆக அதிக அளவிலான நிலப்பரப்புகள் தீயில் கருகின.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாசிங்கப்பூர்புகைமூட்டம்மன்னிப்புமணிலா

தொடர்புடைய செய்திகள்