தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இபு எரிமலை குமுறல்: ஆயிரக்கணக்கானோரை வெளியேற்ற நடவடிக்கை

1 mins read
2c9c3d86-c5cf-4dcd-804f-d55556020b8b
இந்தோனீசியாவின் இபு எரிமலை குமுறுவதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் எரிமலை குமுறுவதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) தெரிவித்தனர்.

வட மலூக்கு மாநிலத்தில் ஒதுக்குப் புறத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் உள்ள இபு எரிமலை புதன்கிழமையன்று (ஜனவரி 15) குமுறியது. அதனைத் தொடர்ந்து நான்கு கிலோமீட்டர் உயரம் வரை புகை எழுந்தது.

அந்த எரிமலைக்கான எச்சரிக்கை நிலையை இந்தோனீசியாவின் நிலவியல் அமைப்பு உடனடியாக ஆக உயரிய அளவுக்கு உயர்த்தியது. அதனால் இபு எரிமலைக்கு அருகே வாழும் 3,000 பேரை வீடுகளிலிருந்து வெளியேற வைக்கும் நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி இபு எரிமலைக்கு ஆக அருகே உள்ள கிராமத்தில் வாழும் 517 பேர் வெளியேற்றப்பட்டனர். அன்றைய தினம் பிற்பகலில் எஞ்சிய குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமை மாலை ஆறு மணி முதல் அப்பகுதிவாசிகள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் நில நிர்வாக, தளவாடம் தொடர்பிலான நெருக்கடிகளால் அந்நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் பேரிடர் நிர்வாக அமைப்பின் பேச்சாளர் இர்ஃபான் இட்ருஸ் கூறினார். வியாழக்கிழமை பெய்யத் தொடங்கிய மழையும் இடையூறாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்