ஜகார்த்தா: ஜாவா கடற்பகுதியில் வாரயிறுதியில் கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமற்போன 129 பேரைத் தேடும் பணியில் இந்தோனீசிய மீட்புப் படையைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உள்ளது என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற அந்தக் கப்பலில் 243 பேர் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோசமான வானிலை காரணமாய்க் காணாமற்போனதாக மீட்பு அமைப்பு கூறியது.
கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து தென்கலிமந்தானில் உள்ள பஞ்சர்மசின் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப்பலிலிருந்து 108 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
“காணாமற்போனோரைத் தேடும் பணியை அதிகாலையிலிருந்து நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதற்காக 622 ஊழியர்களையும் 12 கப்பல்களையும் ஈடுபடுத்தியுள்ளோம்,” என்று பஞ்சர்மசின் மீட்பு அமைப்பின் தலைவர் ஐ புட்டு சுதாயனா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் (6) மாற்றம் ஏதுமில்லை என்றும் அவர் கூறினார்.
மீட்பு அமைப்பு பகிர்ந்த காணொளியில், கறுப்பு, சிவப்பு நிறத்திலான பெரிய கப்பல் தலைகீழாகக் கவிழ்ந்து, அதன் ஒரு பகுதி கடலில் மூழ்கியிருப்பதைக் காணப்படுகிறது. கவிழ்ந்த கப்பலின் அருகில் ஆள்களைச் சுமந்து சென்ற இரண்டு சிறிய படகுகள் மிதப்பதையும் பார்க்க முடிந்தது.
கப்பலின் வலப்புறத்தில் பலத்த அலைகள் மோதியதால் அது ஒரு பக்கமாகச் சாய்ந்தது என்று தேசிய மீட்பு அமைப்பின் மற்றோர் அதிகாரி எடி பிராகோசோ கூறினார்.
கப்பல் கவிழ்ந்துவிட்டதாக அந்த வழியாகச் சென்ற ஹெலிகாப்டர் தகவல் அளித்ததாகப் போக்குவரத்து அமைச்சர் டுடி பூர்வகந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

