ஜகார்த்தா: இந்தோனீசியத் துணை அதிபர் ஜிப்ரான் ரகபுமிங் ராகாவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் வேளையில், தாம் பதவியிலிருந்து விலக விரும்புவதாக அதிபர் பிரபோவோ சுபியாந்தோவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) காலையில் இருவருக்கும் இடையே இரண்டரை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் பேசிய அரசாங்கச் செயலாளர் பிரசெத்தியோ ஹாதி, தமது கல்வி ஆவணங்களின் நம்பகத்தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க ஜிப்ரான் வாய்ப்புக் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தின்கீழ், அப்பதவி வகிக்கத் தேவையான மேல்நிலைப் பள்ளிப் படிப்பை தாம் முடித்துவிட்டதை நிரூபிக்க அவர் விரும்புகிறார்.
ஜகார்த்தாவில் வித்யா சந்திரா வளாகத்தில் உள்ள அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிப்ரான், தாம் அதிபர் பிரபோவோவைத் தந்தைபோலக் கருதுவதாகவும் அவரது அறிவுரைகளை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஜிப்ரானைப் பதவிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவருக்கு எதிராகக் கருத்துத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஒரு மாதகால விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 10ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. இத்தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான படிவங்கள், நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து கையொப்பத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வலம் வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
