ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஹல்மகேரா தீவில் அமைந்துள்ள மவுன்ட் இபு எரிமலை புதன்கிழமை (ஜனவரி 15) காலையில் குமுறியது.
அதிலிருந்து வெளியான சாம்பல் நான்கு கிலோமீட்டர் உயரம்வரை சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 7.11 மணிக்குத் தொடங்கிய எரிமலைக் குமுறல் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு நீடித்ததாக எரிமலையியல் துறை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதனையடுத்து, அவ்விடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குக் குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை முதலே மவுன்ட் இபு குமுறத் தொடங்கியதாகவும் அதிலிருந்து கிளம்பிய சாம்பல் மூன்று கிலோமீட்டர் உயரம்வரை சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த எரிமலையை ஒட்டிய பகுதிகளில் ஏறக்குறைய 13,000 பேர் வசித்து வருகின்றனர். இருப்பினும், மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான திட்டம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
“இன்றைய எரிமலைக் குமுறலால் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. ஆயினும், மக்களை வெளியேற்றுவதற்கான தேவை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவதற்காகப் பணியாளர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளோம்,” என்று இந்தோனீசியப் பேரிடர் முகவையின் பேச்சாளர் அப்துல் முகாரி கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மவுன்ட் இபு பலமுறை குமுறியது. அதனால், சென்ற மே மாதம் அதனை ஒட்டி அமைந்துள்ள ஏழு சிற்றூர்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.