ஜோகூர் பாரு: கம்போங் முகமது அமின் என்ற வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 18 கைக்குழந்தைகள் உள்ளிட்ட 34 பேரை மலேசியத் தீயணைப்பு, மீட்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அவர்கள் உமிக்கு சாயாங் பாலர்பள்ளி, பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் சிக்கியிருந்தனர்.
சிக்கிக்கொண்டவர்கள் குறித்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மாலை 4.26 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர். அதையடுத்து லார்கின் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 9 வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்துக்குச் சென்றது.
பாலர்பள்ளி, பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தைச் சூழ்ந்த வெள்ளத்தில் 18 கைக்குழந்தைகள், 10 பிள்ளைகள், ஐந்து ஆசிரியர்கள், ஒரு சமையல் ஊழியர் ஆகியோர் சிக்கியிருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவர்கள் அனைவரும் மீட்புப் படகுகள் மூலம் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டனர்.
மேலும் ஐந்து மாதக் குழந்தையையும் கம்போங் பாசிரி என்ற இடத்திலிருந்து அதிகாரிகள் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, மலேசியாவின் பாசன, கால்வாய்த் துறை, கிளந்தானில் உள்ள ஏழு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.
அங்குள்ள தாழ்வான, அதிக அபாயம் உள்ள பகுதிகளில் இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிவரை வெள்ளம் பெருக்கெடுக்கக்கூடும் என்று பாசன, கால்வாய்த் துறை முன்னுரைத்தது.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் வானிலைத் துறை கனத்த மழை தொடரும் என்று முன்னுரைத்ததை அடுத்து வெள்ளம் குறித்து தேசிய வெள்ள முன்னுரைப்பு, எச்சரிக்கை நிலையம் எச்சரிக்கைகளை விடுத்தது.
அதன் அடிப்படையில் டம்பாட், பாசிர் மாஸ், தானா மேரா, மாசாங், கோத்தா பாரு, பாசோக், பாசிர் புத்தே ஆகிய ஏழு வட்டாரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று நிலையம் சொன்னது.
வெள்ள முன்னுரைப்பு, எச்சரிக்கை நிலையம் சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கிறது என்றும் வெள்ள எச்சரிக்கை குறித்து அவ்வப்போது தகவல் தரும் என்றும் குறிப்பிட்டது.
வெள்ளம் கணித்ததைவிட முன்னதாகவோ பின்னதாகவோ ஏற்படக்கூடும் என்று நிலையம் சொன்னது.

