அமெரிக்க விமானச் சேவை முடக்கத்திற்கு இணையக் கருவி காரணமாக இருக்கலாம்

அமெரிக்க விமானச் சேவை முடக்கத்திற்கு இணையக் கருவி காரணமாக இருக்கலாம்

படம்: இபிஏ

15 Nov 2026 - 5:45 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க விமானப் போக்குவரத்து முடக்கத்திற்கு அரசாங்க ஒப்பந்ததாரரான எல்3ஹாரிஸ் நிறுவிய புதிய இணையத் தொடர்புக் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அரசு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் 20,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் முடங்கின. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட ஆக அதிக நேர விமானச் சேவை முடக்கமாக இது கருதப்படுகிறது.

பழமையான அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தொலைத்தொடர்பு அமைப்பின் பலவீனத்திற்கு இந்தச் சம்பவம் ஒரு வேதனையான உதாரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் கண்ணாடி இழை கம்பிவடங்கள் தவறுதலாகத் துண்டிக்கப்பட்டதால் அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் பழைமையான தொலைத்தொடர்பு அமைப்புகள் செயலிழந்தன.

அந்த அமைப்புகள், முறையாக மேம்படுத்தப்படும் வரை மீண்டும் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்காலத் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாதவையாக அந்த கட்டமைப்புகள் இருப்பதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துணை அமைச்சர் ஷான் டஃபி சனிக்கிழமை (நவம்பர் 14) கூறினார்.

எல்3ஹாரிஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தொலைத்தொடர்பு இணைப்புகளை மாற்றும் வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாக திரு டஃபி தெரிவித்தார்.

ஆர்கன்சாஸ், டெக்சஸ் ஆகிய இரு இடங்களில் நிறுவப்பட்ட ‘ரௌட்டர்’ எனப்படும் இணையத் தொடர்புக் கருவிகளில் சிக்கல்கள் இருந்திருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அது பயனர் தவறா அல்லது எல்3ஹாரிஸ் நிறுவனம் பழுதான ரவுட்டரைப் பொருத்தியதா, அதில் திறமையின்மை இருந்ததாக என்பனவற்றைக் கண்டறிய பணியாற்றி வருகிறோம். எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்