கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் தொடர்பில் இருந்த வர்த்தகர் ஒருவரின் அலுவலகங்களைக் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர் என்று திங்கட்கிழமை (மார்ச் 16) ‘த ஸ்டார்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளின் ஆதரவைக் கொண்டு பல நிறுவனங்களில் பணியாற்றியோரை மிரட்டி அவர்களை வேலைகளில் இருந்து அகற்ற முயன்ற திட்டத்தில் அந்த வர்த்தகர் அங்கம் வகித்தார் என்ற சந்தேகம் அவர்மீது எழுந்துள்ளது.
காவல்துறை, பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரு அமைப்புகளின் அதிகாரிகள் திரு விக்டர் சின் என்ற வர்த்தகரின் இரண்டு இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) சோதனை நடத்தியுள்ளனர்.
அங்கிருந்து இரண்டு சொகுசு வாகனங்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள், ரொக்கம், ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனை நடக்கும்போது திரு சின்னும் அவரது மனைவியும் அங்கு இல்லை என்றாலும் அவரது மூன்று உதவியாளர்கள் அங்கிருந்தனர் என்று தெரிகிறது.
இந்த விவரங்களை அடையாளம் தெரிவிக்க விரும்பாத ஆனால் விவரம் அறிந்த சிலர் த ஸ்டார் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) துணையுடன் அந்நாட்டில் உள்ள பல நிறுவனத் தலைவர்களை மிரட்டி பிறகு நிறுவனங்களை அவர்களிடமிருந்து பறித்து, அவற்றை ஏற்று நடத்தும் குற்றக் கும்பல் பற்றி கடந்த பிப்ரவரி மாதம் புளூம்பர்க் ஊடகம் செய்தி வெளியிட்டது.
அச்சமயம் இதுபற்றி கேள்வி எழுந்தபோது குற்றச்சாட்டை ஆணைய அதிகாரிகளும் திரு சின்னும் திட்டவட்டமாக மறுத்தனர். தற்போது நடந்துள்ள சோதனைகள் பற்றி பாதுகாப்பு ஆணையம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், காவல்துறை ஆகிய அமைப்புகள் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு மலேசிய தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பட்ஸ்இல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு இச்சோதனைகள் நடந்துள்ளன.

