டிக்டாக், கூகலின் யூடியூப் தளங்களுடன் தீவிரமாகப் போட்டியிடவும் தொலைக்காட்சித் துறையில் தடம் பதிக்கவும் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டகிராம் புதிய காணொளித் தயாரிப்புகளுடன் களமிறங்குகிறது.
இதன் அங்கமாக, 90 நிமிடங்கள் வரை நீளமுடைய கிடைமட்டக் காணொளிகளுக்கான ‘ஃபீச்சர்ஸ்’, தொடர் வடிவிலான குறுநாடகங்களுக்கான ‘சீரிஸ்’ ஆகிய புதிய அம்சங்களை இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்துகிறது.
அத்துடன், கடந்த பத்தாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் ‘இன்ஸ்டகிராம் லைவ்’ நேரலை வசதியையும் மெட்டா நிறுவனம் மறுசீரமைக்கிறது. இந்த மாற்றத்தின் மூலம் பயனாளர்களைப் பின்தொடராதவர்களுக்கும் ‘ரீல்ஸ்’ பக்கத்தில் நேரலை ஒளிபரப்புகள் எளிதில் தென்படும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமூகப் பொழுதுபோக்குத் தளங்களுள் ஆகச் சிறந்த இடமாக உருவெடுப்பதே தங்களது தலையாய இலக்கு என்று இன்ஸ்டகிராமின் காணொளி விரிவாக்கப் பணிகளை மேற்பார்வையிடும் தயாரிப்புத் துணைத் தலைவர் டெஸ்ஸா லியன்ஸ் தெரிவித்தார்.
காணொளிகள் வாயிலாகக் கதைகளை எடுத்துரைக்கவும் அவற்றைப் பார்வையாளர்கள் கண்டறிவதை விரிவுபடுத்தவும் கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, படைப்பாளர்களின் உள்ளடக்கங்களைக் காண மக்கள் தொலைக்காட்சிகளில் அதிக நேரம் செலவிடுவதால், தொலைக்காட்சியை மையப்படுத்திய நகர்வு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
இன்ஸ்டகிராமில் பயனாளர்களின் பங்களிப்புக் காணொளிகள் மூலமாக முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக, அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் காலாண்டு வருமான அறிக்கையின்போது மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டிருந்தார்.
தொடக்கத்தில் புகைப்படப் பகிர்வுத் தளமாகப் பிரபலமடைந்த இன்ஸ்டகிராம், தற்போது பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட உத்திகளை வகுப்பதில் சற்றே பின்தங்கியுள்ளதுடன் யூடியூப், டிக்டாக் தளங்களின் கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளது.
