உளவுத் தகவல் சேகரிப்புத் தளம்: தைவானுக்கு எதிராகச் சீனா நடவடிக்கை

உளவுத் தகவல் சேகரிப்புத் தளம்: தைவானுக்கு எதிராகச் சீனா நடவடிக்கை

1 mins read
11a8e577-679b-4e32-a267-d6df1d11cbb1
சீன ஆட்சிமுறைக்கு எதிராக மாற்றத்தை விரும்புவோர்க்குப் பாதுகாப்பான ஒரு வழித்தடத்தை தனது உளவுத் தகவல் சேகரிப்பு இணையத்தளம் வழங்குவதாகத் தைவான் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனக் குடிமக்கள் தங்கள் நாடு குறித்த உளவுத் தகவல்களைத் தெரிவிப்பதற்காகத் தைவான் அரசு புதிய இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தைவானின் இந்த நடவடிக்கை அதனுடைய ‘மோதல் போக்கை’ வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள சீனா, அதற்கு எதிராகக் கடுமையான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

தைவானும் சீனாவும் நீண்டகாலமாக ஒன்றையொன்று உளவு பார்த்து வருகின்றன.

இந்நிலையில், சீன ஆட்சிமுறைக்கு எதிராக மாற்றத்தை விரும்புவோர்க்குப் பாதுகாப்பான வழித்தடத்தை வழங்கும் நோக்கில், தைவானின் தேசியப் பாதுகாப்புப் பணியகம் அந்தப் புதிய இணையத்தளத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளின் உளவு அமைப்புகளைப் பின்பற்றியே அந்தத் தளம் தொடங்கப்பட்டதாகத் தைவான் குறிப்பிட்டது.

அதற்கு, புதன்கிழமை (ஜூன் 17) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சீனாவின் தைவானிய விவகார அலுவலகத்தின் பேச்சாளர் சென் சின்ஹுவா கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

“உளவுத் தகவல் திருட்டு, ஊடுருவல் மற்றும் நாசவேலைகளில் தைவான் ஈடுபட்டு வருகிறது. இது இருதரப்பு மோதலைத் தீவிரப்படுத்தி, உறவைக் கெடுக்கும் செயலாகும்,” என்று அவர் சாடினார்.

மேலும், தைவானிய உளவு அமைப்புகளுக்குத் தகவல் அளிப்பது குற்றச் செயலாகக் கருதப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, தைவான் பிரிவினைவாதிகள் தொடர்பான குற்றங்கள் குறித்துப் புகாரளிக்க சீனா கடந்த 2024ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்