காஸா: காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மே 17ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
மே 15ஆம் தேதியிலிருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், தனது ஆகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று எனக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இரண்டு நாள்களுக்கு முன்னர் தமது மத்திய கிழக்கு பயணத்தை நிறைவேற்றியதை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் மேலும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கிடையே புதையுண்டு கிடப்பதாகவும் வடக்கு காஸாவிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மர்வான் அல் சுல்தான் தெரிவித்தார்.
தாக்குதல்களில் 459 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் தனது செயல்பாடுகளை விரிவுசெய்து மேலும் தாக்குதல்களை நடத்தும் என்று இஸ்ரேலிய ராணுவம் மே 16ஆம் தேதியன்று தெரிவித்தது.
அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவரும் உதவிப்பொருள்களை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து அங்கு உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தத் தாக்குதலைக் கொடுரக் குற்றம் என வர்ணித்துள்ள ஹமாஸ், அமெரிக்க நிர்வாகம் இதற்குக் காரணம் என்றது.
தொடர்புடைய செய்திகள்
மே 18ஆம் தேதியன்று உயிரிழந்தோரில் மூன்று செய்தியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர். காஸாவிலுள்ள மற்றொரு குடும்பம், தனது உறுப்பினர்கள் இருபது பேரை இழந்திருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யெஹ்யா அல் சின்வாரின் சகோதரர் ஸக்காரியா அல் சின்வரும் அவரது பிள்ளைகளில் மூவரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.