பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 33 பேர் மாண்டுவிட்டனர்.
மழையும் வெள்ளமும் தொடரும் என்று அஞ்சப்படுவதால் அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை இடமாற்றம் செய்யத் திட்டமிடுகின்றனர்.
தாய்லாந்தின் தென்பகுதியிலும் மலேசியாவின் எட்டு மாநிலங்களிலும் இரண்டாவது ஆண்டாக தொடர் மழை பொழிந்து வருகிறது. இதுவரையில் இரண்டு நாடுகளிலும் 45,000 பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் இந்தோனீசியாவில் 13 பேர் வரையிலும் மலேசியாவில் ஒருவரும் மாண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஹட்யாய் நகரில் அரசாங்க மருத்துவமனையின் முதல்மாடி சேதமடைந்துள்ளது.
அங்கு 600 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர்களில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பெற்றுவரும் 50 நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரி சொம்ரெக் சுங்சமான் உறுதிப்படுத்தினார்.
அங்கு சிக்கியுள்ள 2000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் உறவினர்கள் ஆகியோருக்கு உதவ படகுகள் பயன்படுத்தப்படும் என்று திரு சொம்ரெக் கூறினார்.
அவசர உதவிக்கு தயாராக வைக்கப்பட்டுள்ள 20 ஹெலிகாப்டர்களும் 200 படகுகளும் பாதிக்கப்பட்டோரை அடைய சிரமப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் சிரிபொங் அங்காசகுல்கியாட் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

