சாபாவுக்கான இடைக்கால சிறப்பு மானியம் 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு: அன்வார்

சாபாவுக்கான இடைக்கால சிறப்பு மானியம் 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு: அன்வார்

2 mins read
fe7fd9f4-6474-4fce-a76f-e8f18d2deb98
மலேசிய அரசாங்கம் சாபாவுக்குரிய 40 விழுக்காடு வருவாய் உரிமத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்துக்கான இடைக்கால சிறப்பு மானியத் தொகையை அடுத்த ஆண்டில் 600 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலத்தின் 40 விழுக்காடு வருவாய் உரிமத்தொகை மற்றும் அதனை வழங்கும் வழிமுறைகள் குறித்த இறுதி பேச்சுவார்த்தை முடிவடையும் வரை, ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இந்த நிதி உயர்வு வழங்கப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

சனிக்கிழமையன்று (மே 30) நடைபெற்ற சாபா மாநில அளவிலான ‘காமாத்தான்’ அறுவடைத் திருவிழாவை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்து உரையாற்றியபோது பிரதமர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கம் சாபாவுக்குரிய 40 விழுக்காடு வருவாய் உரிமத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

“நான் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் தலைவராகவும், அனைத்து இனங்கள், சமயங்கள் மற்றும் மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவராகவும் அறியப்படவே விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சாபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், பழங்குடி சமூகங்களின் முதன்மைத் தலைவர் ஹுகுவான் சியாவ், மாநில அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கமாக ஒற்றுமையையும் அமைதியையும் பிரதிபலிக்கும் ‘முண்டுங் சொலுங்கான்’ என்ற பாரம்பரிய வரவேற்பு நடனம் அரங்கேறியது.

இந்த அறுவடைத் திருவிழா வளம் சேர்த்த இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி நவிலவும் மக்கள் அனைவரும் ஒன்றிணையவும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்று காமாத்தான் விழாக் குழுவின் தலைவர் ஜோக்கிம் குன்சலாம் கூறினார்.

சாபாவில் உள்ள பல்வேறுபட்ட கலாசாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்குத் தொடர்ந்து பேணப்பட்டு வரும் சகிப்புத்தன்மையே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சாபாவின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளியல் மேம்பாட்டுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களுக்கு அவர் தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மே 30, 31ஆம் தேதிகளில் உச்சகட்டத்தை எட்டும் இந்த ஒரு மாதக் கால காமாத்தான் விழாவின் முக்கிய அங்கமாக, சாபாவின் பாரம்பரியப் பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றும் ‘உண்டுக் ஙாடாவ்’ அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்