டெலிகிராம் செயலியின் நிறுவனர்மீது அனைத்துலகக் கைதாணை: ரஷ்யா

டெலிகிராம் செயலியின் நிறுவனர்மீது அனைத்துலகக் கைதாணை: ரஷ்யா

படம்: ஏஎஃப்பி

29 Jul 2026 - 8:20 pm

1 mins read

மாஸ்கோ: சமூக ஊடகச் செயலியான டெலிகிராமின் நிறுவனர்மீது ரஷ்ய கூட்டமைப்புப் பாதுகாப்புச் சேவை (எஃப்எஸ்பி) பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

டெலிகிராம் நிறுவனர் பவெல் டுரோவுக்கு எதிராக அனைத்துலக கைதாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அமைப்பு புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்தது.

உக்ரேனின் சிறப்புச் சேவைக்கான தற்காப்புப் படைகளும், பயங்கரவாத அமைப்புகளும் பயன்படுத்தக்கூடிய பதிவுகளை டெலிகிராம் செயலி அதன் பதிவுகளில் இருந்து நீக்கத் தவறியது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

அதனால் ரஷ்யக் கூட்டமைப்பில் பல தீவிரவாத நடவடிக்கைகளும் கீழறுப்பு செயல்பாடுகளும் நடந்ததாகவும் பலர் கூட்டாகக் கொல்லப்பட்டதோடு இணைய மோசடிகள் நிகழ்ந்ததாகவும் ரஷ்யா அதன் குற்றச்சாட்டில் குறிப்பிட்டது.

ரஷ்யாவின் குற்றச்சாட்டு வெளிவந்த சிறிது நேரத்தில், எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் இயங்கும் தமது அதிகாரபூர்வ கணக்கில், திரு டுரோவ் தகாத முறையில் கைசெய்கை காட்டுவதைப்போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதன் வெறுப்பை டெலிகிராம் செயலி நிறுவனம் வெளிப்படுத்தியது.

ரஷ்யாவின் கைதாணை குறித்தும் தீவிரவாதத்துக்கு துணைபோன குற்றச்சாட்டு குறித்தும் எவ்விதக் கருத்துகளையும் டெலிகிராமும் திரு டுரோவும் இதுவரை தெரிவிக்கவில்லை.

சட்டவிரோதப் பதிவுகளை டெலிகிராமில் வெளியிட்டதாக திரு டுரோவ் ஏற்கெனவே பிரான்சில் 2024ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். தற்போது அவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வசிக்கிறார். அங்குதான் டெலிகிராமின் தலைமை அலுவலகம் இயங்குகிறது.

குறிப்புச் சொற்கள்