த ஹேக்: பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே மனிதநேயக் குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்ளவேண்டுமா என்பதை முடிவுசெய்வதற்கான கலந்துரையாடலை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தொடங்கவிருக்கிறது.
போதைப் பொருளை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான குற்றங்களைத் திரு டுட்டர்டே எதிர்கொள்கிறார். அத்தகைய குற்றங்களை அவர் புரிந்தாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல் நான்கு நாள்களுக்கு நீடிக்கும். அப்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் திரு டுட்டர்டேக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா என்பது கண்டறியப்படும்.
வழக்குக்கு முந்தைய கலந்துரையாடலுக்குத் திரு டுட்டர்டே முன்னிலையாவதைத் தள்ளுபடி செய்யும்படித் தற்காப்புத் தரப்பு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் அங்கீகரித்தது. அதையடுத்து 80 வயது திரு டுட்டர்டே நீதிமன்றத்துக்கு வரப் போவதில்லை என்று கூறினார். கலந்துரையாடலைத் தொடர்ந்து விசாரணை தொடர்பிலான முடிவை நீதிபதிகள் 60 நாள்களுக்குள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கவேண்டும்.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திரு டுட்டர்டேமீது மூன்று குற்றங்களைச் சுமத்தியுள்ளனர். 2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் திரு டுட்டர்டே குறைந்தது 73 கொலைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்புவதாய் அவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும், போதைப் பொருளுக்கு எதிரான இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மாண்டதாகக் கூறப்படுகிறது. முழுமையான விசாரணை மூலம் இன்னும் கூடுதலான குடும்பங்கள் சாட்சிகூற முன்வரக்கூடும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 2016ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை பிலிப்பீன்சின் அதிபராகப் பொறுப்புவகித்த திரு டுட்டர்டே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார்.
அதிபராக இருந்த காலகட்டத்தில் திரு டுட்டர்டே செல்வாக்கு நிறைந்த 14 நபர்களின் கொலைகளுக்குக் காரணமாக இருந்ததாய்க் கூறப்படுகிறது. திரு டுட்டர்டே தம்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை மூலம்தான் போதைப் பொருளுக்கு எதிரான இயக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.


