பேங்காக்: பல பில்லியன் டாலர் இணைய மோசடிகளை மேற்கொள்ளும் ஆசிய மோசடிக் கும்பல்கள் தற்போது உலகம் முழுவதும் அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இணைய மோசடிகள் வளர்ந்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இணைய மோசடிக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
அக்கும்பல்கள் குடியிருப்பாளர் கட்டடங்கள்போல் கட்டடங்களைக்கட்டி ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் வேலை செய்கின்றன. அவை பலரை வற்புறுத்தி மோசடிச் செயல்களில் ஈடுபடவைக்கிறது குற்றக்கும்பல்கள்.
போதைப்பொருள் கும்பல்களைப் போல் இணைய மோசடிக் கும்பல்களும் பெரிய அளவில் வளர்ந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களும் பல அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தாலும் மோசடிக் கும்பல்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து மோசடி வேலைகளைத் தொடர்கின்றன.
“இது ஒரு புற்றுநோய்போல் பரவி வருகிறது. அதிகாரிகள் ஓர் இடத்தில் கும்பல்களை அழித்தால் மற்றோர் இடத்தில் கும்பல்கள் வளர்கின்றன. கும்பல்களின் ஆணிவேரை அகற்ற முடியவில்லை அவை தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கின்றன,” என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.
இணைய மோசடிகளால் ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டு மின்னிலக்க நாணயங்களுக்கான மோசடியில் மட்டும் 5.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. மேலும் காதல், முதலீடு போன்ற மோசடிகளில் சிக்கியும் பலர் மில்லியன் கணக்கான டாலரை இழந்தனர்.
குற்றக் கும்பல்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்களையும் முதியவர்களையும் பயமுறுத்திப் பணத்தைப் பறிக்கின்றன.
தாய்லாந்து, மியன்மார், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் மோசடிக் கும்பல்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.