ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தேசிய செய்தி சஞ்சிகையான ‘டெம்போ’வைச் சேர்ந்த செய்தியார்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டுக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தோனீசிய செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக அமைப்புகள் குரல் எழுப்பியதை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது.
ஜகார்த்தாவின் தென்பகுதியில் உள்ள டெம்போ சஞ்சிகையின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டெம்போ சஞ்சிகை செய்தியாளர்களுக்குக் கடந்த வாரம் இரு பொட்டலங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
அனுப்பியவரின் பெயர் அவற்றில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு பொட்டலத்தில் பன்றித் தலையும் மற்றொரு பொட்டலத்தில் தலை துண்டிக்கப்பட்ட எலிகளும் இருந்தன.
அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனீசியாவின் அதிபராக திரு சுஹார்த்தோ பதவி வகித்தபோது டெம்போ சஞ்சிகை இருமுறை தடை செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
1994ஆம் ஆண்டில் அது இரண்டாவது முறையாகத் தடை செய்யப்பட்டது.
திரு சுஹார்த்தோவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து டெம்போ சஞ்சிகைகள் மீண்டும் வெளியிடப்பட்டன.

