1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உட்பட 12 பேரிடம் விசாரணை

1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உட்பட 12 பேரிடம் விசாரணை

படம்: பெர்னாமா

04 Mar 2026 - 6:16 pm

2 mins read

புத்ராஜெயா: மலேசிய அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மற்றும் 11 பேரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அந்த முன்னாள் அமைச்சரின் அடையாளத்தை வெளிப்படுத்த ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி மறுத்துவிட்டார்.

“முன்னாள் அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது,” என்று புதன்கிழமை (மார்ச் 4) ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும், அந்த 12 பேரில் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பிற அரசு அமைப்புகளின் ஊழியர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.

“வெளிநாட்டில் சாட்சி ஒருவர் உள்ளார். அவரை மலேசியாவுக்கு வரவழைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்துள்ளோம். இதுவரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவர் உடனடியாக பிரிட்டனிலிருந்து மலேசியா திரும்பி வந்து தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு ஊடகங்கள் வாயிலாக அழைப்பாணை அனுப்பியுள்ளோம்,” என்று திரு அசாம் பாக்கி கூறினார்.

இதனிடையே, மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் முடிவை ஆணையம் வரவேற்பதாக திரு அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

“வெளிப்படைத்தன்மையைக் காண்பிப்பதற்காக வழக்கு விசாரணை பகிரங்கமாக நடத்தப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். இது தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க உதவும். குறிப்பாக, பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் இது முக்கியமானது.”

“ஊழல் என்பது நம் நாட்டில் ஒரு தீவிரமான விஷயம் என்பதை பொதுமக்கள் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படும் இடைத்தரகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ‘ஒப் மிடில்மேன்’ எனும் அதிரடி நடவடிக்கையின்கீழ், 7.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கணக்குகள் மற்றும் சொத்துகளை ஆணையம் முடக்கியுள்ளது.

மூன்று மாத கால உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ரொக்கம், சொகுசு வாகனங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் திரு அசாம் பாக்கி தெரிவித்தார்.

பல்வேறு நாட்டு நாணயங்கள், 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 25 சொகுசு வாகனங்கள், 40,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், 27 கைப்பேசிகள் மற்றும் 41 அலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிசாரணைஊழல்பறிமுதல்