மியூனிக்: ஜெர்மனியின் மியூனிக் நகரில் கூட்டத்துக்குள் காரைச் செலுத்திய ஆஃப்கானிய ஆடவரின் வழக்கு நீதிமன்றத்தில் சனிக்கிழமை (ஜனவரி 16) விசாரணைக்கு வரவிருக்கிறது.
2025ஆம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவத்தில் இரண்டு வயதுச் சிறுமியும் சிறுமியின் தாயும் மாண்டனர். பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
ஃபர்ஹாட் என் என்று அடையாளம் காணப்பட்ட சந்தேக ஆடவர்மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 44 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சமய உந்துதலின் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஆடவர், விபத்தில் உயிரிழந்து விடுவார் என்று எதிர்பார்த்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி 1,400 தொழிற்சங்க உறுப்பினர்கள் மியூனிக் நகரில் பேரணி நடத்தினர். அப்போது 24 வயது ஃபர்ஹாட், வேண்டுமென்றே தமது பிஎம்டபிள்யூ மினி (BMW Mini) காரைக் கூட்டத்துக்குள் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு முன் குடியேறிகள் குறித்து காரசாரமான விவாதம் இடம்பெற்றிருந்தது.
காருக்கு அடியிலும் முன்புறமும் மக்கள் இருந்ததால் கிட்டத்தட்ட 23 மீட்டர் தூரத்துக்குப் பிறகு அது நின்றுவிட்டதாகக் குற்ற அறிக்கை சொன்னது.
கார் மோதியதில் 37 வயதுப் பெண்ணும் அவரது மகளும் 10 மீட்டர் உயரம் அளவுக்குப் பறந்து தலையில் பலத்த காயமுற்றனர். மருத்துவமனையில் பல நாள்கள் கழித்து சிகிச்சைப் பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காபுலில் பிறந்த ஃபார்ஹாட், சமய உள்நோக்கத்துடன் அந்தத் தாக்குதலை நடத்தியதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் மக்களை வேதனைப்படுத்துவதால் ஜெர்மனியில் அந்தத் தாக்குதலை ஃபர்ஹாட் நடத்தியதாக நம்பப்படுகிறது.
ஃபர்ஹாட் ஐஎஸ்ஐஎஸ் போன்ற எந்தப் பயங்கரவாதக் குழுவையும் சேர்ந்தவரல்ல என்று நம்பப்படுகிறது.


