ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

படம்: ராய்ட்டர்ஸ்

05 Nov 2026 - 5:36 pm

2 mins read

லண்டன்: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியா, சீனா, ஈராக், கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல ஈரான் முழு விலக்கு அளித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகதம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) ஈரானிய உள்ளூர்ச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் அதை உறுதிப்படுத்தினார்.

மேலும், அந்த நாடுகளின் கப்பல்களை அமெரிக்கா இடைமறிக்காது என்றும் திரு அமீர் குறிப்பிட்டார்.

“குறிப்பிட்ட சில பரிசீலனைகள் மற்றும் இருதரப்பு நலன்களை மேம்படுத்தும் நோக்கில்தான் இந்த விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டு செல்வதற்காக இந்தியக் கப்பல்களின் இயக்கத்தை ஈரான் எளிதாக்கி வருகிறது,” என்று அவர் கூறினார்.

அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கில் சீனக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனக் கப்பல்கள் ஈரானுக்குப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்தியுள்ளன. ஆனால் கத்தார் கப்பல்கள் இலவசமாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஈராக் கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற தகவல் தெளிவாக வெளிவரவில்லை.

ஹோர்முஸ் நீரிணை பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கிறது. உலக எரிசக்தி விநியோகத்தில் ஏறக்குறைய 20 விழுக்காட்டை ஹோர்முஸ் கையாளுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை நடத்தியது.

தாக்குதல் தொடங்கியவுடனே ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. அதன் காரணமாக அந்த வட்டாரத்தில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் மோதலில் 15 கடலோடிகள் உட்பட 23 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்