ஈரான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது: டிரம்ப்

ஈரான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது: டிரம்ப்

1 mins read
17c4ffb1-05a3-4de0-b79a-2c60c5a343bd
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் வெற்றியை மறைக்க ஊடகங்கள் முயல்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு. - படம்: இபிஏ

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையில் ஈரான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) தெரிவித்தார்.

அத்துடன், அந்நாடு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பியது என்றும் ஆனால் தாம் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் திரு டிரம்ப் கூறினார்.

“ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றி செய்தி வெளியிடுவதை, பொய்ச் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் வெறுக்கின்றன,” என்று திரு டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டார்.

“ஈரான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் நான் ஏற்கும் வகையிலான ஒப்பந்தம் இல்லை அது,” என்று அவர் தம் பதிவில் கூறினார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகள் மீது வாஷிங்டன் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கியுள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை விரைவில் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் என்றும் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஈரானின் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், இஸ்ரேல், அதன் வளைகுடா அண்டை நாடுகள் ஆகியவற்றின் மீது வானூர்திகள், ஏவுகணைகள் வழி டெஹ்ரான் தாக்குதல்களை முன்னெடுத்தது.

குறிப்புச் சொற்கள்