வாஷிங்டன்: ஈரான், மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அதன் அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சரணடைந்துள்ளது என்றும் சனிக்கிழமை (மார்ச் 7) ஈரான் கடும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடுகளைத் தாக்கப்போவதில்லை என்று ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாக திரு டிரம்ப், தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் கூறினார்.
கடந்த சில நாள்களாக அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதையடுத்து திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் இவ்வாறு பதிவிட்டார். அண்டை நாடுகளிலிருந்து தங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தப்படாவிடில் அவற்றின் மீது தாங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று ஈரானின் இடைக்காலத் தலைமைத்துவ அமைப்பு ஒப்புக்கொண்டதாக திரு பெஸெஷ்கியன் குறிப்பிட்டிருந்தார்.
ஈரானை மேலும் தாக்கப்போவதாக திரு டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் அளித்த வாக்குறுதியில், “ஈரானின் மோசமான நடத்தை காரணமாக இதுவரை குறிவைக்கப்படாத பகுதிகளுக்கும் மக்களுக்கும் ஒட்டுமொத்த அழிவையும் மரணத்தையும் விளைவிக்க தீவிர ஆலோசனை நடந்து வருகிறது,” என்றார்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கைவிடச் செய்யவேண்டும் அல்லது அந்நாடு மிக மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரெயில் காட்ஸ், லெபனான் அரசாங்கத்துக்கு அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“லெபனானுடன் எங்களுக்கு எவ்வித எல்லை உரிமை சார்ந்த பிரச்சினையும் இல்லை. அதேவேளை, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டிருக்கும், லெபனானிய எல்லையிலிருந்து இஸ்ரேலை நோக்கிய தாக்குதல்கள் மறுபடியும் இடம்பெறும் சூழலை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்,” என்று திரு காட்ஸ் எடுத்துரைத்தார்.
“அதனால் நாங்கள் எச்சரிக்கிறோம். செயலில் இறங்கி தகுந்த நடவடிக்கை எடுங்கள். இல்லாவிடில் நாங்கள் அதற்கும் மேல் நடவடிக்கை எடுப்போம்,” என்றார் அவர்.

